திருக்குறுங்குடியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

களக்காடு, பிப். 15:  களக்காடு அருகே திருக்குறுங்குடியில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளதால் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பகுதியில், முக்கிய தொழிலாக விவசாயம் விளங்குகிறது. இப்பகுதியை சேர்ந்த பெரும்பான்மையான மக்கள், விவசாயத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர். திருக்குறுங்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள விளைநிலங்களில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் நெல் நடவு செய்தனர். டீலக்ஸ் பொன்னி, அம்பை-16, ஆந்திரா பொன்னி, ஆடுதுறை-45 ரகங்களை சேர்ந்த நெல்லை பயிர் செய்திருந்தனர். தற்போது நெல் அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இயந்திரங்களை கொண்டு அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் நெல் அதிகளவில் அறுவடை செய்யப்பட்டாலும். போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருக்குறுங்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் தனியார் வியாபாரிகளிடமே நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. 150 கிலோ நெல் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இது விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. மேலும் பெருமளவில் இழப்பும் ஏற்படுகிறது. நெல் அறுவடை இயந்திரத்தின் வாடகை 1 மணி நேரத்திற்கு ரூ.1,500ல் இருந்து ரூ.2,500 வரை கொடுக்க வேண்டியதுள்ளது. மேலும் இடுபொருட்கள் செலவுகளை காட்டிலும் குறைவான தொகையே கிடைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால் அரசு கொள்முதல் நிலையங்களில் 100 கிலோ நெல் ரூ.1,800 வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அரசின் ஊக்கத் தொகையும் கிடைக்கும். எனவே விவசாயிகளின் நலன் கருதி திருக்குறுங்குடியில் உடனடியாக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: