பனி, சுட்டெரிக்கும் வெயிலால் செடியிலேயே கருகும் குண்டுமல்லி மொட்டுகள்

ஓமலூர்,  பிப்.15: ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் அதிகாலை பனிப்பொழிவும்,  பகலில் கடும் வெயில் சுட்டெரிப்பதாலும் குண்டுமல்லி மொட்டுகள் செடியிலேயே  கருகி வீணாகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர், கஞ்சநாயக்கன்பட்டி,  பூசாரிப்பட்டி, மூக்கனூர், குண்டுக்கல், தீவட்டிப்பட்டி, காடையாம்பட்டி  ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் கிணற்று பாசனத்தின் மூலம் செவ்வந்தி,  குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, சாமந்தி, மரிக்கொழுந்து, துளசி உள்ளிட்ட  பல்வேறு வகையான பூக்களை அதிகம் சாகுபடி செய்துள்ளனர். ேபாதிய  மழையில்லாததால், தற்போது கிணறுகளில் தண்ணீர் குறைந்துள்ளது. தவிர, அதிகாலை  நேரத்தில் பனிப்பொழிவு, பகலில் கடும் வெயில் சுட்டெரிப்பதால் பூக்கள்  விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் அதிக அளவில் குண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர். ஒரு முறை நடவு செய்து  பராமரித்து வந்தால், சுமார்  10 ஆண்டுகளுக்கு பூக்கள் பூக்கும். ஓமலூர், காடையாம்பட்டியில் விளையும் பூக்களை சேலம் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். தற்போது குண்டுமல்லி சீசன் தொடங்கியுள்ளது. ஆனால், அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவும், பகல் நேரத்தில்  கடும் வெயிலும் அடிப்பதால் சீதோஷ்ண நிலை மாற்றமடைந்துள்ளது. இதன் காரணமாக, குண்டுமல்லி செடிகளில் மொட்டுகள் மலரும் முன்பாகவே கருகி கொட்டி விடுகிறது. இதனால், பூ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பூக்களை பாதுகாக்க செய்ய வேண்டியவை குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: