காடையாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு கலெக்டரை கிராம மக்கள் முற்றுகை

காடையாம்பட்டி, பிப். 15:  காடையாம்பட்டி அடுத்த பண்ணப்பட்டி கிராமத்தில் உள்ள  20க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர். மேலும், காசு கொடுத்து கேன் குடிநீர்  வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று, சேலம் கலெக்டர் ரோகிணி, பண்ணப்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு வந்ததை அறிந்த மக்கள், குடிநீர் கேட்டு கலெக்டரை முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து ஒவ்வொருவராக கலெக்டரை சந்திக்க அனுப்பி வைத்தனர். உள்ளே சென்ற பெண்கள், தண்ணீர் இல்லாமல் படும் கஷ்டங்களை கலெக்டரிடம் கூறி மனுக்களை கொடுத்தனர். மேலும், குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலாளர் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர் அவதூறாக பேசுவதாக தெரிவித்தனர். அப்போது, முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். பின்னர் ஒன்றிய அதிகாரிகளை அழைத்த கலெக்டர், பிரச்னைக்குரிய உடையார் தெருவில் குடிநீர் விநியோகிப்பவரை உடனடியாக மாற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் சமாதானமடைந்த பெண்கள், அங்கிருந்து களைந்து சென்றனர்.

Related Stories: