நங்கவள்ளி அருகே அரசுத்துறை கண்காட்சியில் தெர்மாகோல் பயன்பாடு

நங்கவள்ளி,  பிப்.15: நங்கவள்ளி அருகே சின்னசோரகையில் சிறப்பு மனுநீதி  முகாம் நேற்று  நடைபெற்றது. இதில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கில், தடை செய்யப்பட்ட தெர்மாகோல் பயன்படுத்தி  இருந்ததை கலெக்டர் கண்டித்தார்.சேலம் மாவட்டம்  நங்கவள்ளி அருகே, சின்னசோரகையில் வருவாய் துறை சார்பில், சிறப்பு  மனுநீதி முகாம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு  அரசுத்துறைகள் சார்பில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பயனாளிகள் 60  பேருக்கு ₹4.25 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. முன்னதாக முகாம்  நடந்த திடலுக்கு வந்த கலெக்டர், அங்கு பல்வேறு அரசுத்துறைகள் சார்பில்  அமைக்கபட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, செய்முறை விளக்கங்களை  கேட்டறிந்தார். அப்போது நங்கவள்ளி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்  சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில், அரசால் தடை செய்யப்பட்ட தெர்மாகோல்  பயன்படுத்தி இருந்தனர். இதை பார்த்த கலெக்டர் ரோகிணி, உடனடியாக அத்துறை  அதிகாரிகளை அழைத்து, தெர்மாகோல் சீட் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. நாம்  அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்றவர், அவற்றை உடனடியாக  அகற்றும்படி எச்சரித்து விட்டு சென்றார். இதையடுத்து அத்துறை அலுவலர்கள்  தெர்மாகோல் சீட்டை அங்கிருந்து அகற்றினர். இந்த முகாமில் அரசுத்துறை  அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

 

Related Stories: