வனப்பகுதியில் தீ வைத்தால் சிறை தண்டனை விதிப்பு

சேலம், பிப்.15: வனத்தில் தீ வைத்தால் சிறை தண்டனை கிடைக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் தற்போது வெயிலின் தாக்கம் துவங்கியுள்ளது. இதனால் வனப்பகுதியில் தீ விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் தீ தடுப்பு காவலர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வனப்பகுதியில் காய்ந்த சருகுகளை அப்புறப்படுத்தல், ரோந்து செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம் தெற்கு, வடக்கு, ஏற்காடு, டேனிஷ்ப்பேட்டை, மேட்டூர், தம்மம்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், நாமக்கல் வனசரகத்துக்கு பகுதிகளில் உள்ள வனக்கிராமங்களில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், வனத்துக்குள் எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க, தற்போது  வனப்பகுதியில் தீ தடுப்பு கோடுகள் வெட்டப்பட்டு வருகிறது. வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். வனப்பகுதியில் தீ வைப்போருக்கு வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்,’ என்றனர்.

× RELATED ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி...