வீரகனூர் கால்நடை சந்தையில் அடிப்படை வசதிகள்

கெங்கவல்லி, பிப்.15:  கெங்கவல்லி தாலுகா வீரகனூர் 7வது வார்டு பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்திலேயே 2வது மிகப்பெரிய சந்தை என்ற பெயர் பெற்றது. ஆனால், தற்போது சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மாடுகள் வரத்து குறைந்துபோனது. இதுகுறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது: வீரகனூர் கால்நடை சந்தை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலை 3 மணிக்கு தொடங்கி மதியம் 4 மணி வரை நடைபெறும். நூற்றுக்கணக்கான மாடுகளும், ஆயிரக்கணக்கில் ஆடுகளும் சந்தையில் விற்பனை செய்யப்படும். ஆனால், சந்தையை நிர்வகித்து வரும் பேரூராட்சி நிர்வாகம் வருவாயை மட்டுமே வசூலித்தது. அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. சந்தை வளாகத்தில் மாடுகள் தண்ணீர் குடிக்க புதிதாக தொட்டி கட்டவில்லை. மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடும். இதனால் சந்தைக்கு கால்நடை வரத்து படிப்படியாக குறைந்துபோனது. தற்போது காலை 4 மணிக்கு கூடும் சந்தை, காலை 9 மணிக்குள் முடிவடைந்து விடுகிறது. மாடுகள் வரத்து குறைந்ததால் சந்தையை நடத்த ஏலம் எடுத்தவர்களுக்கு நஷ்டமே ஏற்படுகிறது. பேரூராட்சி நிர்வாகத்துக்கு முக்கிய நிதி ஆதாரமாக விளங்கும் சந்தையை, முறையாக அதிகாரிகள் நிர்வகிக்காததால், எதிர்வரும் காலத்தில் சந்தை இல்லாமல் ேபாகும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சந்தையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: