புதுச்சத்திரம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

சேந்தமங்கலம், பிப்.15: புதுச்சத்திரம் அருகே மணல் கடத்திய லாரியை கைப்பற்றிய போலீசார், கெங்கவல்லியைச் சேர்ந்த டிரைவரை கைது செய்தனர்.மோகனூர் பகுதியில் இருந்து, நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை புதுச்சத்திரம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு மணல் கடத்தப்படுவதாக எஸ்.பி. அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், பிள்ளாநல்லூர் பஸ் ஸ்டாப் பகுதியில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார், கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால், அந்த லாரி நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார், ஜீப்பில் துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர். அந்த லாரியில் நடத்திய சோதனையில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் கலியமூர்த்தி(34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மணல் பாரத்துடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

× RELATED புதுச்சத்திரம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் ; ஓமலூர் கிளீனர் கைது