×

காதலர் தினத்தில் காலியானது காதல் ஜோடிகள் வராததால் வெறிச்சோடிய மலைக்கோட்டை

நாமக்கல், பிப்.15:  எப்போதும் காதலர்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் நாமக்கல் மலைக்கோட்டை, காதலர் தினமான நேற்று ஒரு காதல் ஜோடி கூட வராமல் வெறிச்சோடி கிடந்தது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. சுமார் 300 அடி உயரத்திலுள்ள இந்த மலைக்கோட்டை மீது பள்ளி வாசல், பெருமாள் கோயில் ஆகியவை உள்ளன. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மலைக்கோட்டைக்கு செல்ல வசதியாக சிறு,சிறு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மலைக்கோட்டையில், தினமும் காலை முதல் மாலை வரை காதலர்கள் கூட்டம் அலைமோதும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர் வகுப்புக்கு கட் அடித்து விட்டு மலைக்கோட்டைக்கு வந்து செல்வார்கள். திண்டுக்கல், கரூர் போன்ற ஊர்களில் இருந்து கூட காதலர்கள் இந்த மலைக்கோட்டைக்கு படையெடுப்பார்கள். ஆனால், நேற்று காதலர் தினத்தையொட்டி, நாமக்கல் மலைக்கோட்டை வெறிச்சோடி காணப்பட்டது. மலைக்கோட்டை மேற்பரப்பில் காதலர்கள் தனிமையில் அமர பல்வேறு இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. காதலர்களை கண்காணிக்க நேற்று நாமக்கல் காவல் நிலையத்திலிருந்து 2 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை மலை உச்சியில் சுற்றி சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், ஒரு காதல் ஜோடி கூட மலைக்கோட்டை பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நாமக்கல் மலைக்கோட்டையில் காதலர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அவர்களை செல்போனில் படம் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பிவிடும் கும்பலும் நடமாடுகிறது. எனவே, காதலர் தினத்தையொட்டி மலைக்கோட்டையில் அசம்பாவித சம்பவம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற நோக்கில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக நேற்று மலைக்கோட்டைக்கு காதல் ஜோடிகள் யாரும் வரவில்லை,’ என்றனர்.

Tags : couples ,hill ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!