நிலுவை தொகையை வழங்கக்கோரி ஓசூர் வீட்டு வசதி வாரிய அலுவலகம் முற்றுகை

ஓசூர், பிப்.15: ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் 10 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கடந்த 1994ம் ஆண்டில் கையகப்படுத்தியது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு முதல் கட்டமாக இழப்பீடு தொகையையும் வழங்கியது. பின்னர், பாக்கி தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்கவில்லை என்றும், இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் கடந்த 1996ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் தொகையை ஈடு செய்யும் வகையில், ஓசூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு சொந்தமான ஜீப், கம்ப்யூட்டர்கள், மேசை, நாற்காலி, பேன் உள்ளிட்ட ₹30 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று நீதிமன்ற ஊழியர்கள் 3 பேர் அங்கு சென்றனர். அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாததால், கோர்ட் ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களில் சிலர், அலுவலகத்தில் இருந்த அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், மீண்டும் ஓரிரு நாளில் உயர் அதிகாரியை சந்தித்து நிலுவைத்தொகையை கேட்டு முறையிடப்போவதாக தெரிவித்து, நில உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

× RELATED வாடகை தகராறில் வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை