×

கோடை காலத்தையொட்டி வனப்பகுதியில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மும்முரம்

தர்மபுரி, பிப்.15: தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்க தீ தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் 1,700 சதுர கிலோ மீட்டர் வனக்காப்புக் காடுகளை கொண்டது. இம்மாவட்ட காடுகள், கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த காடுகள் காவிரி, தென்பெண்ணை ஆறு, சனத்குமார நதி, வாணியாறு ஆகிய ஆறுகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளன. தென்மேற்கு, வடகிழக்கு மழைக்காலங்களில் மழையை பெறும் இம்மாவட்டம், சராசரியாக 851.1 மில்லி மீட்டர் மழையை பெறுகிறது. இந்த ஆண்டு சராசரி மழையளவில் 45 சதவீதம் மட்டுமே பெய்துள்ளது.  தர்மபுரி மாவட்ட வனங்கள் பெரும்பான்மையும், இலையுதிர் காடுகளாகவே உள்ளன. ஓரிரு இடங்களில் வறண்ட பசுமை மாறாக் காடுகளும் காணப்படுகின்றன. தர்மபுரி காடுகளில் தேக்கு, சந்தனம், வேம்பு, புளிய மரம், துரிஞ்சை, ஆல், வேலம், நீலகிரி, எட்டி, நாகமரம் உள்ளிட்ட பங்வேறு வகை மரங்கள் உள்ளன. மேலும், யானை, சிறுத்தை, காட்டு பன்றி, மான், கரடி, காட்டெருமை, நரி, குரங்குகள் அதிகளவில் உள்ளன.

தற்போது மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், வத்தல்மலை, தொப்பூர், பரிகம் காப்புக்காடு, பென்னாகரம் சரகம் பவானூர்மலை காப்புக்காடு, ஒகேனக்கல் சரகம் ஒட்டப்பட்டி குத்திராயன் காப்புக்காடு, பாலக்கோடு சரகம் திருமால்வாடி வனப்பகுதியில் தீ விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதில், வனப்பகுதியில் காய்ந்த சருகுகளை அப்புறப்படுத்தல், தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், ரோந்து போன்ற பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும், வனத்துக்குள் எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் கிராம பகுதிகளில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.  இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வன அதிகாரிகள் கூறுகையில், ‘வனப்பகுதியில் தீ விபத்தை தவிர்க்க, வனப்பகுதியில் தீ தடுப்பு கோடுகள் வெட்டும் பணி நடக்கிறது. வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வன விலங்குகளின் தேவைக்காக, வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் வனவிலங்குகள், கிராமப்பகுதிக்குள் நுழைவது தடுக்கப்படும். வனப்பகுதியில் தீ வைப்போருக்கு, வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது,’ என்றனர்.





Tags : forest ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...