சர்வர் முடங்கியதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி

தர்மபுரி, பிப்.15: தர்மபுரி மின்வாரிய அலுவலகத்தில் சர்வர் முடங்கியதால், மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் அருகே, மின்கட்டண வசூல் மையம் உள்ளது. இந்த மையத்தில் இலக்கியம்பட்டி, செந்தில்நகர், கருவூல காலனி, கலெக்ட்ரேட்,  ெவங்கட்டம்பட்டி, ராயல் நகர், சவுளூர், நேரு நகர் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் நுகர்வோர், மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மின்கட்டண வசூலிப்பு மையத்தில் நேற்று முன்தினம் சர்வர் முடங்கியது. இதனால், வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த முடியவில்லை. இதனால், அங்கிருந்த பணியாளர்கள் தனியார் சேவை மையங்களில், மின்கட்டணத்தை செலுத்தும்படி அனுப்பி வைத்தனர். இதே போல் நேற்றும் 2வது நாளாக இணைய சேவை பாதிப்பு என அறிவிப்பை மாட்டி விட்டு, வாடிக்கையாளர்களிடம் மின் கட்டணத்தை வசூலிக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தனியார் சேவை மையங்களை தேடி அலைந்து திரிந்ததோடு, கூடுதலாக ₹20 வரை செலுத்தும் நிலை ஏற்பட்டது.

× RELATED கொள்ளிடம் பகுதியில் அறிவிப்பில்லாத மின்வெட்டால் மக்கள் கடும் அவதி