×

கரூர் நகராட்சியையொட்டிய காதப்பாறை ஊராட்சி மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு 25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு

கரூர், பிப். 15 காதப்பாறை ஊராட்சியில் மக்கள் அடிப்படை வசதியின்றி தவிக்கின்றனர். நகரையொட்டிய பகுதியில் குடிநீருக்காக பரிதவிக்கின்றனர்.கரூர் நகராட்சியை அடுத்துள்ள ஊராட்சி பகுதி காதப்பாறை. இங்கு வெண்ணெய்மலை, காதப்பாறை பகுதி உள்ளிட்ட 9 சிற்றூராட்சி வார்டுகள் உள்ளன. இதன் அருகே உள்ள இனாம் கரூர் நகராட்சி தற்போது கரூர் நகராட்சி நிர்வாகத்தோடு இணைக்கப்பட்டு பெருநகராட்சியாக இருக்கிறது. காதப்பாறை ஊராட்சியாக இருந்தாலும் நகரை ஒட்டியிருக்கிறது.
நகர பகுதியில் இருப்பது போன்ற குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பெருகி தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகையில் ஒரு சிறிய நகரத்தை போல இருக்கிறது. ஊராட்சிக்கு இதுவரை ஆண் தலைவர்கள் இருந்த நிலையில் இம்முறை தலைவர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. மக்கள் தொகை. ஆண்கள் 3816. பெண்கள் 4124. மொத்தம் 7940. வருங்காலத்தில் கரூர் மாநகராட்சியாகும்போது காதப்பாறை ஊராட்சி கரூருடன் இணைக்கப்படும் நிலை உள்ளது. தற்போது நடைபெறப்போகும் உள்ளாட்சி தேர்தல் தான் கடைசி தேர்தலாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்பட்வில்லை. மாநில அரசின் ஆட்சிக்காலம் 5 ஆண்டுகள் அதில் இரண்டு ஆண்டுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்படாமல் தனி அதிகாரிகளின் பதவி தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகள் பூதாகரமாகி கொண்டிருக்கிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறியது:சுசீலா: தங்கநகர் பகுதியில் கடந்த 3 மாதமாக ஆழ்குழாய் கிணறுகள் பழுதடைந்து காணப்படுகிறது. குடிநீர் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்புதான் வருகிறதே தவிர நடைமுறையில் எதுவும் செய்வதில்லை. இதற்காக தனி போன் நம்பர் எல்லாம் கொடுக்கின்றனர். ஆனாலும் தீர்வு கிடைப்பதில்லை. 3 மாதமாக குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். தண்ணீர் கிடைக்காமல் எப்படி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது. ஆண்கள் வேலைக்குப் போனால் மாலை தான் வருகின்றனர். போர்வெல் தண்ணீர் கூட கிடைக்காமல் ரொம்ப சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். உடனடியாக போர்வெல்லை சரிசெய்து குடிநீர் வழங்க வேண்டும்.கிருஷ்ணவேணி: காதப்பாறை ஊராட்சி பகுதி முழுமைக்கும் குடிநீர் விநியோகம் என்பது 25 நாட்களுக்கு ஒருமுறை தான் வருகிறது. இப்படி வரும் நீரும் அனைவருக்கும் சமமாக கிடைப்பதில்லை. மேடான பகுதியில் மோட்டார் மூலம் தண்ணீரை எடுக்கின்றனர். அதற்கு அப்பால் உள்ள பகுதிக்கு எப்படி குடிநீர் கிடைக்கும். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.நல்லம்மாள்: காதப்பாறை ஊராட்சியில் வீடுகள் கட்டிடங்கள் பெருகிக்கொண்டே போகிறது. இந்த ஏரியாவை அடுத்து இருக்கின்ற வெங்கமேடு பகுதி கரூர் நகராட்சி பகுதியில் இருக்கிறது. எங்கள் பகுதி பஞ்சாயத்து பகுதியில் இருக்கிறது.

பெருகி வரும் வளர்ச்சிக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இன்றி தவித்து கொண்டிருக்கிறோம். ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் வீடுகளை கட்டிக்கொண்டு சிரமப்படுகிறோம்.செல்வி: குடிநீர் இணைப்புக்காக பொருத்தப்பட்ட குழாய்கள் அனைத்தும் மிகவும் சன்னமாக இருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு குழாய்களை சீரமைக்காமல் விட்டு விட்டனர். இதனால் அனைத்து பகுதிக்கும் குடிநீர் விநியோகிக்கும் சமயத்தில் முறையாக கிடைப்பதில்லை. 25 நாட்களுக்கு ஒருமுறை வரும் நீரை எத்தனை நாட்களுக்கு வைத்து பயன்படுத்த முடியும். குடிநீரை சேமித்து வைத்து ஓரவுக்குத்தான் பயன்படுத்த முடியும். காந்திநகர், தில்லைநகர், நேதாஜி நகர் என அனைத்து பகுதியிலும் இதே பிரச்னை தான் இருக்கிறது. கோடை காலம் வருவதற்கு முன்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும்.சாந்தி: வடிகால் வசதி செய்யப்படவில்லை. பஞ்சாயத்தில் இருந்து வரிவசூல் செய்ய மட்டுமே வருகின்றனர். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். வடிகால் வசதியில்லாததால் தெருக்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து சுகாதாரகேடு ஏற்படுகிறது. டெங்கு போன்ற கிருமிகள் பரவி கொண்டிருக்கிறது. டெங்கு சமயத்தில் மட்டும் பஞ்சாயத்தில் இருந்து வந்து அறிவுரைகளை சொல்லி விட்டு போகின்றனர். அருகில் நகராட்சி குப்பைகளை எரிப்பதால் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : district ,Karur ,Karur Municipality ,
× RELATED கரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி