புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக காரைக்காலில் திமுக-காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்கால், பிப்.15: மக்களுக்கு எதிராக செயல்படும் புதுச்சேரி ஆளுநரை, புதுச்சேரியை விட்டு வெளியே போக வலியுறுத்தி, காரைக்காலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காரைக்கால் மாவட்ட  கலெக்டர் அலுவலகம் அருகே, மாதா கோவில் வீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமை வகித்தார். திமுக சார்பில், அமுதா ஆறுமுகம், சங்கர், ரிப்பாஷ், வீரதாசன், ஆனந்தராஜ், காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் அரசன், சந்திரமோகன் உள்ளிட்ட பலரும், திமுக சார்பில் ஆனந்தராஜ், ரிபாஷ் உள்ளிட்ட பலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வின்சென்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, காரைக்கால் டாக்கர் அம்பேத்கர் வீதி, மாதாகோவில் சந்திப்பில் அனைவரும் சாலை மறியல் செய்ய முயற்சித்தபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அனைவரும் அதே சாலையில் சுமார் ஒரு மணிநேரம்  அமர்ந்து, ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.    

போராட்டத்தின் முடிவில், முன்னாள் அமைச்சர் நாஜிம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களையும் ஆட்டிப்படைத்து வருகிறார். இதனை மக்கள் உற்று நோக்கி வருகின்றனர். கிரண்பேடி ஆளுநராக வந்த நாள் முதல் மக்களையும், மக்கள் நலத் திட்டங்களை பாழ்படுத்தி வருகிறார்.மக்கள் ஆட்சி நடைபெறும் இடத்தில், ஒரு திட்டம் நிறைவேற்ற வேண்டுமென்றால், ஆளும் கட்சியுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வேண்டுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுத்து, மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய ஆளுநர் சாலையில் இறங்கி அவர்களை அச்சுறுத்தி வருவது கண்டனத்துக்குரியது. இந்த போக்கு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், -திமுக கூட்டணி ஆளுநரின் அதிராக போக்கை இனியும்  அனுமதிக்க மாட்டோம். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் புதுச்சேரியை இணைக்க வேண்டுமென மக்கள் போராட்ட களத்தில் இறங்கியது போல், ஆளுநருக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.    


× RELATED திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி வெற்றி