×

தேசிய நெடுஞ்சாலைத்துறை மீது குற்றச்சாட்டு

கருங்கல், பிப். 15: மார்த்தாண்டத்தில்  ₹142 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2 வருடத்திற்கு முன் தொடங்கியது. தற்போது பாலத்தின் மேல் பகுதியில் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வெள்ளோட்ட அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது.
வரும் 19ம் தேதி கன்னியாகுமரியில்  பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இந்த பாலம் உள்பட பல்வேறு திட்ட பணிகளை அவர் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் வருகை மார்ச் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பா.ஜ மாநில தலைமை தெரிவித்துள்ளது. அதேவேளை மார்த்தாண்டத்தில் பாலத்தின் அடிப்பகுதியில் சாலை அமைத்தல், இணைப்பு சாலைகள் மேம்படுத்துதல், வடிகால், நடைபாதை அமைத்தல், பூமிக்கடியில் கேபிள் பதித்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடையாததால் தான் பிரதமர் வருகை ேததி திடீரென மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.குழித்துறை ஆற்றுப்பாலத்தில் இருந்து பம்மம் வரையிலான 2.5 கி.மீ தூரத்தில் தற்போது வரை சுமார் 75 சதவீத அளவில்தான் சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. அதுவும் ஒரே சீராக இன்றி விட்டுவிட்டு பணிகள் மேற்ெகாள்ளப்பட்டுள்ளன. இதேப்போன்று மார்த்தாண்டம் பம்மத்தில் பாலம் முடிவடையும் இடத்தில் பாலத்தின் ஒரு புறம் சுமார் 6 அடி அகலமும், மற்றொரு புறத்தில் 10 அடி அகலமும் தான் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மார்த்தாண்டம் நகர பகுதிக்கு வாகனங்கள், அரசு பேருந்துகள் திரும்பும் பகுதி என்பதால் குறைந்தபட்சம் ஒவ்வொரு பக்கமும் 15 அடி அகலம் இருந்தால் தான் வாகனங்கள் சிரமமின்றி செல்ல முடியும். அதேப்போல் பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை வசதியும் அமைக்க முடியும்.

ஆனால் பம்மத்தில் பாலம் இணையும் பகுதியில் 10 அடி அகலத்தில் அப்படியே சாலையை சமன்படுத்தி தார் போடுவதற்கான பணிகள் தற்போது அவசர அவசரமாக நடந்து வருகிறது. இதற்கு தேவையான இடத்தை உரியவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கி  கையகப்படுத்திவிட்டு சாலையை போதிய அளவில் அகலப்படுத்தி தார் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாறாக சாலையை ஒட்டியுள்ள நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு  பெயரளவில் நோட்டீஸ் மட்டுமே வழங்கி தங்கள் கடமையை முடித்துக் கொண்டனர்.இதேப்போன்று மார்த்தாண்டம் காந்தி மைதானத்திலும் நகர் புறங்களுக்கு பேருந்துகள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலைகளும் மிகவும் குறுகலாகவே உள்ளது. இதனால் தற்போது கூட தினமும் அப்பகுதியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன. பாலம் திறக்கப்பட்ட பின் இந்த சாலை வழியாக பேருந்துகள் உள்பட அனைத்து வகை வாகனங்களும் இயங்கும் போது இதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். இதனால் பாலம் அமைத்ததற்கான நோக்கம் நிறைவேறாது.

எனவே பாலம் திறப்பு விழாவிற்கு முன் பம்மம், காந்தி மைதானம் பகுதிகளில் இணைப்பு சாலைகளை போதிய அளவில் அகலப்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மேம்பால இணைப்பு சாலைகள், வடிகால், நடைமேடை, மின்கேபிள் பதிக்கும் பணிகளை இனியேனும் தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

குறுகலான மேற்கு கடற்கரை சாலை
குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலை மணக்குடி- குளச்சல்- நித்திரவிளை வழியாக அமைந்துள்ளது.  அவசர காலங்களில் குறிப்பாக உள்நாட்டு கலவரம், அண்டை நாடுகளுடன் போர் நடக்கும் தருவாயில் கடற்கரை பகுதிகளுக்கு ராணுவ தளவாடங்களை எளிதில் கொண்டு செல்வதற்காக இந்த சாலை அமைக்கப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சாலையை திட்டமிட்ட காலத்தில் திறக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் சாலைகள் போதிய அகலமின்றி அமைக்கப்பட்டது. குறிப்பாக நித்திரவிளையை அடுத்த விரிவிளையில் இருந்து கணபதியான்கடவு ஆற்றுப்பாலம் வரை சுமார் 200 மீட்டர் தூரம் தற்போது வரை ஒருவழிப்பாதை போன்று சுமார் 12 அடி அகலத்திலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சாலை திறக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் கடந்தும் இதனை போதிய அளவு அகலப்படுத்த அரசு நிர்வாகங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மின் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு
மார்த்தாண்டம் பாலப்பணியின் போது பூமிக்கடியில் மின்கேபிள் பதிக்கும் பணிகள் நடந்தது. அப்போதே பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு வெடித்து சிதறின. பாலத்தின் அடிப்பகுதியில் வணிக நிறுவனங்களுக்கு பிரித்தனுப்பும் ஜங்ஷன் பாக்சுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பாக்சுகள் மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து பம்மம் பகுதி வரை சாலைமட்டத்தில் இருந்து சுமார் ஒரு அடி உயரத்தில் அமைத்துள்ளனர். மழைக்காலங்களில் இந்த பகுதிகளில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருக்கும். மேலும் மார்த்தாண்டம் கல்லூரி பகுதி தொடங்கி பழைய தியேட்டர் சந்திப்பு வரை நீண்ட தூரத்திற்கு புதிய சாலையில் வடிகால் அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் சாலைகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும்.அத்துடன் பழைய தியேட்டர் சந்திப்பில் உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டால் மழைக்காலங்களில் மின்விபத்துக்கள் உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : highway ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!