×

நாகர்கோவில் மாநகராட்சியாவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? பாதகங்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு

நாகர்கோவில், பிப். 15:  நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக  தரம் உயர்வதால் மத்திய அரசு நிதி நேரடியாக கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. அதே வேளையில் பாதகங்கள் பல இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாகர்கோவில் நகராட்சி திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் 1920ம்  அறிவிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. 1978ல் தேர்வு நிலை நகராட்சி ஆகவும், 1988ல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 2005ம் ஆண்டு முதலே நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க பல்வேறு தன்னார்வ அமைப்புகள், நீண்ட அறிக்கை தயார் செய்து தமிழக அரசை வலியுறுத்தி வந்தன. 2009ம் ஆண்டு காங்கிரை சேர்ந்த அசோகன் சாலமன் நகர்மன்ற தலைவராக இருந்த போது, மாநகராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தஞ்சாவூர் நடைபெற்ற விழாவில் நாகர்கோவில் நகராட்சி அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் நாகர்கோவில் மாநகராட்சியாகும் என வாக்குறுதி அளித்தார்.

2011ல் மாநகராட்சி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த வேளையில், ஆசாரிப்பள்ளம் பேரூராட்சி கரியமாணிக்கபுரம், காந்திபுரம், பெருவிளை, சூரன்குடி  ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, 51 வார்டுகள் 52 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர், மாநகராட்சியாக அறிவிக்க பா.ஜனதாவை சேர்ந்த மீனாதேவ் தலைவராக இருக்கும்போது 2வதாக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதி என்பதால், முதல்வர் ஜெயலலிதா மாநகராட்சியாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கவில்லை. இந்நிலையில், தற்போது நகராட்சி ஆணையர் சரவணக்குமாரும், 28.03.2018 அன்று நகராட்சியை அருகில் உள்ள இரு பேரூராட்சிகள், 6 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் வழியாக அனுப்பினார். இந்நிலையில் வார்டுகள் மறுவரை பணிகள் நடைபெற்று வருவதால், 28.3.2018ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்பட்டு,  தற்போதைய பரப்பளவாகிய 49.10 ச.கீ.மீ பரப்பளவில்,  2 லட்சத்து, 60 ஆயிரத்து, 315 மக்கள் தொகை கணக்கில் கொண்டு விரிவாக்கம் செய்ய 04.09.2018 நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் அரசுக்கு நகராட்சி ஆணையர் சரவணக்குமார் அனுப்பி வைத்தார்.  நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் மாநகராட்சியாகும் என அறிவித்திருந்தார். இதன்படி சட்ட மன்ற கூட்டத்தொடரில் நாகர்கோவில் நகராட்சியின் 98வது வயதில், மாநகராட்சியாக  அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, நகராட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில், பாக்ஸ்கள் கட்டப்பட்டு, பாடலுடன், அலங்கார மின்விளக்கில் நகராட்சி அலுவலகம் ஜொலிக்கிறது.

சாதகங்கள்:
* மத்தியஅரசின் நிதி உதவி நேரடியாக கிடைக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மூலம் அதிகளவு மானியம் கிடைக்கும்.
* நவீன முறையில் தகவல் தொழில் நுட்ப மேலாண்மை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* கடல் தொழில் சார்ந்த வணிகம் மேம்பாடு அடையும். தற்போது ஊராட்சி என்பதால் பல மீனவ கிராமங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அவை மாநகராட்சியாகும் போது கிடைக்கும்.
* கல்வி நிலையங்கள் தரம் அதிகரிக்கும்.
* அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் கிராமப்புறங்களுக்கும் கிடைக்கும்.
* தற்போது நகராட்சி என்பதால், அம்ரூத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி எனும்போது சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டம் செயல் படுத்தப்படும்.  
* பல அடுக்கு வணிக வளாகங்கள் உருவாகும்.
* பாதாள சாக்கடை திட்டம் கிடைக்கும்.
* அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட, தடையற்ற குடிநீர் வசதி கிடைக்கும்.
* சுற்றுலா திட்டங்கள், நகரை அழகுபடுத்தும் திட்டங்கள், பல அடுக்கு வாகன நிறுத்த காப்பகங்கள், ஈரடுக்கு நவீன பேருந்து நிலையம், ஏரி, குளம், கால்வாய் ஒருங்கிணைப்பு பணிகள் என பல வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும்.
* கிராமப்புறங்கள் நகர்ப்புறமாக தரம் உயரும்.
*  குப்பை கிடங்கு பிரச்னைக்கு புதிய நவீன திட்டங்களுக்கு தாராள நிதி கிடைப்பதின் மூலம் தீர்வு கிடைக்கும்.
* நாகர்கோவில் எஸ்.பிக்கு பதில் காவல்  ஆணையர் நியமிக்கப்பட்டு அவரது கட்டுப்பாட்டில் வரும். இதனால் போக்குவரத்து உள்ளிட்ட பிரச்னைகளை அவரே முடிவு செய்து அமல்படுத்த முடியும்.
* ஆணையர் ஐஏஎஸ் அதிகாரி என்பதால், எந்த நடவடிக்கைக்கும் மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்கு காத்திருக்க தேவையில்லை.
வளர்ச்சி பணிகள் நடைபெறும்: முன்னாள் நகர்மன்ற தலைவர் அசோகன் சாலமன்  கூறுகையில், மாநகராட்சி அறிவிப்பு முற்றிலும் வரவேற்க தக்கது. தற்போதே  வரிகள் உயர்வாக உள்ளதால், மேலும் உயராது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய  அரசின் நிதி ஏராளம் கிடைக்கும்.
தற்போதைய பரப்பளவை விட கூடுதலாக  விரிவாக்கம் ெசய்தால் மட்டுமே மாவட்டம் வளர்ச்சி அடையும். உதாரணமாக  நகராட்சி எல்லையில், கணியாகுளம் உள்பட பல கிராமங்கள் வளர்ச்சி அடைந்தாலும்,  அவர்களுக்கு குடிநீர் கிைடயாது. ஆனால் அவர்களை இணைத்தால் குடிநீர் வசதி  கிடைக்கும். பாரம்பரியம் மிக்க தாணுமாலய சுவாமியின் தனித்துவம் குறையாமல்  இருக்க அதனை இணைக்க கூடாது. ஞாலம் வரை இணைத்தால், மக்கள்  குடியிருப்பு இல்லாத மலையாடிவார பகுதியில் 400 ஏக்கருக்கு மேல் புறம்போக்கு  நிலம் கிடைக்கும். மக்கள் குடியிருப்பு இல்லாத அங்கு குப்பை கிடங்கை  மாற்றலாம். ஊராட்சிகளில் அடிப்படை தேவைகள், வளர்ச்சி பணிகள்  ஊராட்சியின் வருவாயை வைத்தே நடைபெறும். ஆனால் மாநகராட்சி அறிவிப்பு  வந்தால், வளர்ச்சி பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
குடிநீர், குப்பை பெரும் பிரச்னையாகும்:  இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் டாக்டர் லால்மோகன் கூறுகை யில்,
மாநகராட்சியாவதால் பொதுமக்களுக்கு வரிகள் அதிகரிக்கும். நகராட்சி  யில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொட்ட நாகர்கோவிலில் இடம் போதாது. ஆறேழு கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் சேர்க்கின்றனர். இதனால் ஊராட்சிகளுக்கு தற்போதுள்ள நிதி
ஆதாரம் கிடைக்காது. கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை இன்னமும் மோசமாகும். குப்பைகளை அகற்றுவதிலும் பெரும் பிரச்னை ஏற்படும். நாகர்கோவிலில் உள்ள குளங்கள் அடைப்பட்டு போகிறது. சுத்தமான தண்ணீர் கிடைக்க சிரமமாக இருக்கும்.
நாகர்கோவிலில் சாலைகள் மிக மோசமாக உள்ளது. 24 சதுர கி.மீட்டருக்குள் ரோடுகளை பராமரிக்க முடியாத நிலையில் இதர பகுதிகளை இணைக்கும் போது வருங்கால சந்ததியினருக்கு அது பிரச்னையாக மாறும். ஊரக பகுதியில் குளங்களை பராமரிக்க மாட்டார்கள். அதனால் தண்ணீர் பிரச்னை மேலும் அதிகரிக்கும். வரி, நிலமதிப்பு, வாடகை கூடும். இதனால் வசதி இல்லாதவர்களுக்கு பெரும் பிரச்னை ஏற்படும்.
இதனை ஆலோசித்து அறிவித்திருக்க வேண்டும். மேயர் அந்தஸ்து, கவுன்சிலர்களுக்கு பேட்டா அதிகரிப்பு என்று தனிநபர் நலன்களே இதில் அதிகம் என்றார்.
கடலோர மக்களின் பிரதிநிதித்துவம் பறிபோகும்:  அந்தோணி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): அழிக்கால், பிள்ளைதோப்பு, ராஜாக்கமங்கலம் துறை, பெரியகாடு, பொழிக்கரை, கேசவன்புத்தன்துறை, புத்தன்துறை, பள்ளம், மணக்குடி ஊராட்சிகளில் மீனவர்களுக்கும் நூறு நாள் வேலை திட்ட பலன்கள் கிடைத்து வருகிறது. மாநகராட்சியால் அது கிடைக்காது. வேணுகோபால் கமிஷன் பரிந்துரையில் மீனவர்களுக்கு மக்கள்தொகை பிரதிநித்துவம் இல்லை.
ஊராட்சி தலைவர் என்ற பெருமையும் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் வரி குறைவு. மாநகராட்சியில் வரி அதிகம். 5 ஆண்டு பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெறவில்லை. தேர்தலை கவனத்தில் கொண்டு அறிவிப்பதால் மக்களுக்கு பலன் இல்லை. கரியமாணிக்கபுரம் ஊராட்சி நகராட்சியுடன் இணைந்து 13 வருடங்கள் ஆகிறது.
ஆசாரிப்பள்ளம் பேரூராட்சியும் இணைத்தனர். இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. நகராட்சி வசதிகள் கூட அந்த பகுதிகளுக்கு கிடைக்கவில்லை.
இதுபோன்ற நிலைதான் மாநகராட்சிக்கும் ஏற்படும்.

பாதகங்கள்:
 மாநகராட்சி அறிவிப்பிற்கு முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் வரவேற்றாலும், அதன் பின்னால் இருக்கும் சூட்சுமங்கள் தெரிந்து சமூக ஆர்வலர்கள் அதிர்ந்தே உள்ளனர். குறிப்பாக ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் விபரம் தெரிந்தவர்கள் மநகராட்சி அறிவிப்பிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அவர்கள் கூறும் பாதகங்கள் விபரம் வருமாறு: ஊராட்சி பகுதிகளுக்கு தொலைபேசி கட்டணம் மிகவும் குறைவு. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கிராமப்புறம் என்றால் குறைந்த பட்ச வைப்பு தொகை போதும். மத்திய, மாநில அரசுகளின் பல சலுகைகள் கிடைக்கும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் உள்ள ஊராட்சி மக்களுக்கு இந்த திட்டம் கிடைக்காது.
* சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி போன்றவை ஊராட்சி பகுதிகளுக்கு பல மடங்கு  உயரும்.
* வீட்டு வாடகை, நகராட்சி கட்டிடங்களின் வாடகை முன்பணம், வாடகை உயரும்.
*  நாகர்கோவில் நகராட்சி நாஞ்சில் நாட்டின் தலைநகர் என்ற பெருமையும் உண்டு. விவசாய நிலங்கள் மிகுதியாக உள்ளதால் இந்த பெயர் வரப்பெற்றது. கடந்த 10 ஆண்டுகளில் கோணம்,  இடலாக்குடி, வடிவீஸ்வரம், வடசேரி பகுதிகளில் விளை நிலங்கள் சில மக்கள் பிரதிநிதிகளின் துணையுடன் வீட்டுமனையாக கபளீகரம் செய்யப்பட்டது. மாநகராட்சியாகும் போது அதன் ஆணையர் ஐஏஎஸ் என்பதால், மாவட்ட நிர்வாகம் கட்டுபாடு கிடையாது. இதனால், எஞ்சியுள்ள விளைநிலங்கள் வீட்டுமனைகளாகி அழிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.
*  தற்போதே பல பகுதிகளில் விளைநிலங்கள், வீட்டு மனைகள் அளவிற்கு வழிகாட்டி மதிப்பீட்டில் உயர்ந்துள்ளது. இதனால் உண்மையில் விவசாய தேவைக்கு கூட நிலங்கள் விற்பதில் சிக்கல் உள்ளது. மாநகராட்சி எனும்போது, இந்த இடங்களின் வழிகாட்டி மதிப்பீடு மேலும் உயரும். விரிவாக்கம் செய்யப்படும் போது, புதியதாக இணையும் ஊராட்சிகள் கடும் பாதிப்படையும்.
* பாதாள சாக்கடை திட்டம், குறிப்பிட்ட அளவில் சாலைகள் விசாலமாக இருக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் இருக்க வேண்டும்.
நாகர்கோவில் நகரம் உள்பட குமரியில் பிரதான சாலைகளே மிகவும் குறுகலாக உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் இங்குள்ள பூகோள அமைப்பால், இன்னமும் முழுமை அடையாமல் இழுத்து கொண்டு உள்ளது.
இந்நிலையில், அனைத்து பகுதிகளிலும் பாதள சாக்கடை திட்டம் எனும்போது, மக்கள் கூடுதல் அவதிக்கு தாயராக இருக்க வேண்டும்.

சுசீந்திரம் பேரூராட்சி மாற்ற வேண்டாம்

2009ல்  மாநகராட்சி தீர்மானத்திற்கான தயாரிப்பு பணியின் போது, ஆணையராக மெகபூபா  இருந்தார்.  நாகராஜா கோயிலை வைத்து நகார்கோவில் இருக்கும் நிலையில்,  சுசீந்திரம் பேரூராட்சியை நாகர்கோவிலுடன் இணைத்தால், தாணுமாலய சுவாமி  கோயிலின் தனித்துவம் குறையும். பாரம்பரியமிக்க  தாணுமாலய சுவாமி கோயில்  உள்ளதால், சுசீந்திரம் பேரூராட்சியாக இருந்தால் மட்டுமே, பாரம்பரியம் மிக்க  கோயில் நகரம் என்ற பெயரும், இதற்கு மத்திய அரசின் சிறப்பு நிதிகள்  கிடைக்கும் என்பதனை நகர்மன்ற தலைவராக இருந்த அசோகன்சாலமனிடம் சுட்டிக்காட்டினார். இதனை அப்படியே ஏற்றுக்கொண்ட அசோகன் சாலமனும், சுசீந்திரம்  தாணுமாலய சுவாமி கோயிலின் பாரம்பரியம் மிக்க பெயரை காக்கும் வகையில், அதனை  இணைக்க வேண்டாம் என கூறினார்.

தொழிற்சாலைகள் இல்லை
மாநகராட்சி என்றால் 10 லட்சம் மக்கள் தொகை, 10 கி.மீ சுற்றளவிற்கு விவசாய நிலங்கள் இருக்க கூடாது என விதிமுறைகள் சொல்கிறது. தொழிற்சாலைகள் அதிகம் இருக்க வேண்டும். ஆனால் நாகர்கோவில் நகரமே முன்பு வயலாக இருந்த இடம். சுற்றிலும் சிறிது விவசாய நிலங்கள் எஞ்சியுள்ளன. கோணம் உள்பட சில இடங்களில் மட்டும் சிறிய அளவிலான தொழிற்கூடங்கள் உள்ளன.

Tags : Nagarcoil Corporation ,
× RELATED வர்த்தக நிறுவனங்கள்,...