இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக பொதுமக்கள் சாலை மறியல்

ஆரணி, பிப்.15: ஆரணி அடுத்த சென்னத்தூர் லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(22).  இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி  மாடு விடும் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்தார்.இதையடுத்து, தமிழ்ச்செல்வன் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன்(20), சதிஷ்(22) ஆகிய இருவரும் பைக்கில் வேகமாக வந்து தமிழ்ச்செல்வன் மீது மோதியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கிருந்து சென்றனர்.பின்னர், மணிவண்ணன், சதிஷ் ஆகியோர் நண்பர்களான மாதவன், ஏழுமலை, மற்றும் குணபாலன் ஆகியோரை வரவழைத்து தமிழ்ச்செல்வனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த தமிழ்ச்செல்வனின் அண்ணன் ஆனஸ்ட்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் தமிழ்ச்செல்வனை மீட்டு ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக நேற்று சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.இதுதொடர்பாக தமிழ்ச்செல்வனின் அண்ணன் மற்றும் உறவினர்கள் தமிழ்ச்செல்வனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்று கொண்ட போலீசார் மணிவண்ணனை மட்டும் கைது செய்தனர்.மேலும், அவருடைய நண்பர்களான சதிஷ் மாதவன், ஏழுமலை, மற்றும் குணபாலன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் இருந்தார்களாம். இதனால், ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வனின் அண்ணன் மற்றும் உறவினர்கள் 150க்கும் மேற்பட்டவர்கள் நேற்று ஆரணி- ஆற்காடு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த டிஎஸ்பி செந்தில், தாலுகா இன்ஸ்பெக்டர் பாரதி சமரச பேச்சுவார்த்தை நடத்தி மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

× RELATED செங்குளத்தில் தடை மீறி மண் ரோடு