பிரசவத்தின் போது மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்பு தானம் மத்திய அமைச்சர் வருகையால் ஆம்புலன்ஸ் செல்வதில் காலதாமதம்

வேலூர், பிப்.15: பிரசவத்தின் போது மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. தானமாக பெறப்பட்ட உடல் உறுப்பு சென்னை கொண்டு செல்வதில் மத்திய அமைச்சர் வருகை காரணமாக ஆம்புலன்ஸ் செல்வதில் தாமதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகா புவனகிரியை சேர்ந்தவர் இன்ஜினியர் கவுதம்ராஜ். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்த கோகிலா(24) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 25ம் தேதி திருமணம் நடந்தது.இந்நிலையில், 7 மாத கர்ப்பிணியான கோகிலாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து போளூரில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து ஆபத்தான நிலையில் கடந்த 4ம் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோகிலாவுக்கு ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருந்தது தெரிந்தது. தொடர்ந்து கடந்த 7ம் தேதி அவருக்கு குறைபிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.பிரசவம் முடிந்த நிலையில் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த கோகிலாவுக்கு நேற்று அதிகாலை மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். குழந்தை தொடர் சிகிச்சையில் உள்ளது. இந்நிலையில் மூளைச்சாவு அடைந்த அவரது உடல் உறுப்புகளை தானம் அளிப்பதாக அவரது கணவர் கவுதம்ராஜ் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தார்.

இதையடுத்து அவரது இருதயம், நுரையீரல்கள் சென்னை மலர் மருத்துவமனைக்கும், கல்லீரல், சிறுநீரகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டது. தானமாக பெறப்பட்ட இருதயம், நுரையீரல்கள் சென்னை மலர் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இதற்காக 2 ஆம்புலன்ஸ்கள், போலீஸ் வாகனங்கள் மதியம் 2 மணியளவில் தயார் நிலையில் இருந்தனர். மதியம் 2.30 மணியளவில் ஆம்புலன்ஸ் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், ஆம்புலன்ஸ் புறப்படுவதற்கான ‘ரூட் கிளியரன்ஸ்’ கிடைக்கவில்லை.இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் விசாரித்த போது, வேலூருக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வந்துகொண்டு இருப்பதால் ‘ரூட் கிளியரன்ஸ்’ கிடைக்கவில்லை என்று தெரியவந்தது. இந்நிலையில் அமைச்சர் வருகை தாமதம் ஆனதால், ஒருவழியாக 3.15 மணியளவில் இதயம், நுரையீரல்கள் சென்னை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர் வருகை காரணமாக உயிருக்கு ஆபத்தான நோயாளிக்காக தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் எடுத்து செல்வதில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட காலதாமதம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது.

× RELATED சங்கராபுரம் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் படுகாயம்