×

வேலூரில் பரபரப்பு விபத்து இழப்பீடு வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனம் ஜப்தி

வேலூர், பிப்.15: வேலூரில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனம் கோர்ட் உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.வேலூர் மூஞ்சூர்பட்டை சேர்ந்தவர் கே.ராமலிங்கம்(54), சப்-இன்ஸ்பெக்டர். இவர் கடந்த 2014ம் ஆண்டு காட்பாடியில் இருந்து பணி முடிந்து காலை வேலூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து ராமலிங்கத்தின் மனைவி வரதம்மாள் மற்றும் அவரது 4 மகன்களும் தங்களுக்கு ₹35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு வேலூர் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்தில் இறந்த ராமலிங்கத்தின் குடும்பத்தினருக்கு ₹18.19 லட்சம் வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கவில்லை.

தற்போது இது வட்டியுடன் சேர்த்து ₹25.62 லட்சமாக உயர்ந்தது. ஆனால் இழப்பீட்டை வழங்காததால் கடந்த 5.10.2017ல் மீண்டும் கோர்ட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் 6.12.2017 அன்று சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜப்தி உத்தரவை பாதிக்கப்பட்டவர்கள் நிறுத்தி வைத்தனர்.ஆனால் ஓராண்டை கடந்து, நேற்று முன்தினம் வரை இழப்பீடு வழங்கப்படாததால் நீதிமன்ற ஊழியர்களுடன் சென்று நீதிமன்றத்தின் ஜப்தி உத்தரவின் பேரில் நேற்று காலை வேலூர் இன்பென்டரி சாலையில் உள்ள சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கம்ப்யூட்டர்கள், மேஜை, நாற்காலிகள் ஜப்தி செய்யப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Insurance company ,Japathy ,Vellore ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...