மத்தியமைச்சருக்கு கவர்னர் பரபரப்பு கடிதம்

புதுச்சேரி, பிப். 15: புதுவை முதல்வரின் அரசியல் விளையாட்டை நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டுமென மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கவர்னர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.  கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவதில் முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தின் காரணமாக புதுச்சேரியில் போராட்டம் வெடித்துள்ளது. 39 கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக கவர்னர் மாளிகை முன் முதல்வர், அமைச்சர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராஜ்நிவாசில் இருந்து வெளியேறிய கிரண்பேடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ளார். பின்னர் அவர் வரும் 20ம் தேதி புதுச்சேரி திரும்பவுள்ளார்.இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியின் தற்போதைய நிலவரம் குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில், புதுச்சேரியில் மோட்டார் வாகன சட்டத்தின்படி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வரின் அனுகுமுறை குறித்து உங்கள் கவனத்துக்கு சில விஷயங்களை கொண்டுவர விரும்புகிறேன்.  ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை பாதுகாப்பு வார விழா மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 புதுச்சேரியில் ஒவ்வொரு மூன்றாவது நாளின் போதும், விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு ஒருவர் உயிரிழக்கிறார்.  முதல்வர் நாராயணசாமி தன்னுடைய பொதுவான அறிவிப்பில், ஹெல்மெட் சட்டத்தை படிப்படியாக அமல்படுத்தலாம், தற்போதைக்கு அப்படியே விட்டுவிடுமாறு கூறுவதால், மக்கள் குழப்பம் அடைகிறார்கள், அதோடு சட்டத்தை தீவிரமாக அமலாக்குவதில் பிரச்னையை ஏற்படுகிறது. இது போலீசாரையும் இரட்டை மனநிலைக்கு உள்ளாக்குகிறது. இதன் மீது முதல்வர் மென்மையான போக்கினை கையாண்டு வருகிறார். மேலும் அவரது இந்த இரட்டை பேச்சு, சாலை பாதுகாப்பு மற்றும் விதிகளை அமலாக்குவதில் அவருக்கு விருப்பமில்லை என்பதையே காட்டுகிறது.  எனவே தங்கள் துறை மூலமாக தெளிவான வழிகாட்டுதல்களை அவருக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.

சாலை பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதில் முதல்வரின் சட்டவிரோதமான உத்தரவுகளை பின்பற்றியதால், முன்னாள் டிஜிபி சுனில்குமார் கவுதமின் செயல்திறன் அறிக்கையில் என்னுடைய கருத்துக்களையும் பதிவிட்டுள்ளேன்.  எனவே இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு சாலை பாதுகாப்பு விஷயத்தில் முதல்வரின் அரசியல் விளையாட்டை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: