கவர்னர் கிரண்பேடி காரைக்காலில் ஏட்டாக பணியாற்ற வேண்டும்

காரைக்கால், பிப். 15:  மக்களுக்கு எதிராக செயல்படும் கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வலியுறுத்தி, காரைக்காலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.தொடர்ந்து, காரைக்கால் டாக்டர் அம்பேத்கர் வீதியில் சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அனைவரும் சாலையில் சுமார் ஒரு மணிநேரம்  அமர்ந்து கவர்னருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.பின்னர் முன்னாள் அமைச்சர் நாஜிம் நிருபர்களிடம் கூறியதாவது: கவர்னர் கிரண்பேடி மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களையும் ஆட்டிப் படைத்து வருகிறார். இதனை மக்கள் உற்று நோக்கி வருகின்றனர். கிரண்பேடி வந்த நாள் முதல், குரங்கு கையில் பூமாலை கிடைத்ததுபோல் மக்களையும், மக்கள் நலத் திட்டங்களை பாழ்படுத்தி வருகிறார். இந்த போக்கு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், -திமுக கூட்டணி கவர்னரின் அதிராக போக்கை இனியும்  அனுமதிக்காது. காரைக்கால் காவல் நிலையங்களில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளது. கவர்னருக்கு புதுச்சேரியில் வேலையில்லை என்றால், அவற்றில் போலீஸ் ஏட்டாக பதவி ஏற்று சிறப்பான பணியை செய்ய முன்வரவேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: