குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

கள்ளக்குறிச்சி, பிப். 15: கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் முறையாக செலுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ள கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அருண் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததில், கட்டணம் செலுத்தாத 10 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரண்டாவது நாளாக நகராட்சி வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) செந்தில் தலைமையில் வருவாய் உதவியாளர்கள் சரண்யா, ராஜூ மற்றும் குடிநீர் பிரிவு பணியாளர்களுடன் 11வது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, நீண்ட நாட்களாக குடிநீர் கட்டணம் செலுத்தாத நபர்களிடம் உரிய தொகை கட்ட வலியுறுத்தினர். அப்போது சிலர் குடிநீர் பாக்கி தொகையை உடனே செலுத்தினர்.

கட்டணம் செலுத்தாத 5 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  மற்றொரு குழு நகராட்சி பணி மேற்பார்வையாளர் கோமதிநாயகம் தலைமையில் பணி ஆய்வாளர் கோபிநாத், நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளர்கள் கில்டாரோஷிணி, சித்ரா மற்றும் குடிநீர் பிரிவு பணியாளர்களுடன் 2வது வார்டு வஉசி நகர் பகுதியில் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு, நீண்ட நாட்களாக குடிநீர் கட்டணம் செலுத்தாத நபர்களிடம் உரிய தொகை கட்ட வலியுறுத்தினர். அப்போது சிலர் குடிநீர் பாக்கி தொகையை உடனே செலுத்தியுள்ளனர். கட்டணம் செலுத்தாத 5 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. மேலும் சொத்து வரி பாக்கி தொகை செலுத்த வேண்டியவர்களும் உடனே செலுத்த வேண்டும் என்றும் குடிநீர் பாக்கி கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு நகராட்சி அதிகாரிகள் குழு தொடர் ஆய்வு செய்து குடிநீர் இணைப்பு துண்டிப்பு பணி தொடரும் என அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

× RELATED விடுதிகளாக மாறும் வீடுகள் குற்றங்கள்...