குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சின்னசேலம், பிப். 15: சின்னசேலம் வட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சின்னசேலம் தாலுகாவில் வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கராயபாளையம், கச்சிராயபாளையம், வடக்கநந்தல், வெங்கட்டம்மாபேட்டை ஆகிய கிராமங்களுக்கு கோமுகி ஆற்றில் இருந்துதான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததால் கோமுகி அணையும் வறண்டு உள்ளது. இதனால் ஆற்றில் உள்ள தண்ணீர் வடிந்து ஆங்காங்கே தண்ணீர் குட்டையாக தேங்கி நிற்கிறது. இன்னும் ஓரிரு நாளில் அந்த தண்ணீரும் வடிந்து ஆறு வடிந்து போகும் நிலை ஏற்பட உள்ளது. இந்த நிலையில், கோமுகி ஆற்றில் பலர் மின்மோட்டார் வைத்து நீரை உறிஞ்சி விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல கோமுகி ஆற்றில் ஓரிரு வீடு கட்டும் பயனாளிகளை தவிர மணல் மாபியா கும்பல்கள் மணலை டிராக்டர்களில் அள்ளி செல்கின்றனர். இதனால் கோமுகி ஆற்றில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. அதேபோல சின்னசேலம் பகுதியில் உள்ள வி.கிருஷ்ணாபுரம், வி.அலம்பளம், வி. மாமந்தூர், கருங்குழி, செம்பாகுறிச்சி, பாக்கம்பாடி, தோட்டப்பாடி, பெத்தாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் போதிய பருவமழை பொழியாத காரணத்தால் ஏரிகளும், குடிநீர் கிணறுகளும் காய்ந்துபோய் உள்ளது.

இதனால் அந்த பகுதியில் உள்ள போர்வெல் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விட்டதால் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதிலும் சில கிராமங்களில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வி. மாமந்தூர், வி. கிருஷ்ணாபுரம் போன்ற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுவதால் பெண்கள் காடு, காடாக அலைந்து குடிநீர் எடுத்து வருகின்றனர். அதேபோல கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் கடும் வறட்சியின் காரணமாக தற்போதே அங்குள்ள மக்களுக்கு முழுமையான அளவில் குடிநீர் கிடைப்பதில்லை. அங்குள்ள பள்ளிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு குளிக்க, துணி துவைக்க தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.எனவே, அரசு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து கோடை காலம் துவங்கும் முன் தற்போதிலிருந்தே குடிநீர் வசதி இல்லாத கிராமங்களை தேர்வு செய்து போர்வெல் கிணறு அமைத்து குடிநீர் வசதி செய்து தரவேண்டும். அதேபோல பயன்பாடு அற்ற போர்வெல் கிணறுகளை கணக்கெடுத்து, அதை மேலும் ஆழப்படுத்த ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: