×

கண்டுகொள்ளாத அதிகாரிகள் ஜல்லிகள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி

நெய்வேலி, பிப். 15:   நெய்வேலி என்.எல்.சி ஆர்ச் கேட் பகுதியை சுற்றி 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கிராம மக்களுக்கு முக்கிய சாலையாக இருந்து வருகிறது. நாள்தோறும் இவ்வழியாக வேகாக்கொல்லை, ஆயிப்பேட்டை, வெங்கடாம்பேட்டை, சத்திரம், வசனாங்குப்பம், கட்டியங்குப்பம், சிறுதொண்டமாதேவி, அப்பியம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இவ்வழியாக தினந்தோறும் நெய்வேலி செல்கின்றனர். இச்சாலையில் பல வருடங்களாக ஜல்லிகள் பெயர்ந்து கரடு, முரடாக இருப்பதால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாய கூலித்தொழிலாளிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த சேதமடைந்த சாலையை தான் பயன்படுத்தி வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. இச்சாலை வழியாக சென்றால் நெய்வேலியில் இருந்து கடலூருக்கும் செல்லும்  குறுக்கு வழிச்சாலை.  

 இதனால் பல கிலோமீட்டர் தூர செலவு மிச்சம் ஆகும் என்பதால் நெய்வேலி பகுதியில் உள்ள பொதுமக்கள் இவ்வழியாக நாள்தோறும் பயணிக்கின்றனர். நெய்வேலி ஆர்ச் கேட் சுற்றியுள்ள கிராம மக்கள், நகர பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேகாக்கொல்லை செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்துள்ளனர். அவ்வழியே தினந்தோறும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தங்களது சைக்கிள்களில் செல்லும்போது விபத்து  ஏற்படுவதாக  பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர். மேலும், இச்சாலை கரடு, முரடாக இருப்பதால், அடிக்கடி பஞ்சராகி வருகிறது. இப்பகுதி வசிக்கும் மக்கள் சாலை வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று குறிஞ்சிப்பாடி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர். எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி பழுதான சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.


Tags : road motorists ,
× RELATED புதுச்சத்திரம்-திருநின்றவூர் இடையே...