×

தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் நிதி பிரச்னை: பேச்சு வார்த்தையில் உடன்பாடு

புவனகிரி, பிப். 15: சிதம்பரம்- கடலூர் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை 45ஏவை நான்கு வழிச்சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு கூடுதலாக நிதி வழங்கக் கோரியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நிலம் கையகப்படுத்த வலியுறுத்தியும் நேற்று புதுச்சத்திரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பரங்கிப்பேட்டை ஒன்றிய விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த சாலை மறியல் போராட்டத்தையொட்டி, சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் ஹேமஆனந்தி முன்னிலையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கோருவது குறித்து 10 தினங்களில் கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும் தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத முதலாவது வழித்தடத்தை பயன்படுத்துவது.

 இரண்டாவது வழித்தடத்தை ரத்து செய்ய வலியுறுத்துவது குறித்தும் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு கடிதம் எழுதுவது, கொத்தட்டை கிராமத்தில் டோல்கேட் அமைப்பதற்கு பதிலாக விவசாயிகள் பாதிக்காத, மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு கடிதம் எழுதுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து நேற்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : land ,negotiations ,Tasildar ,negotiation ,pedestrians ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!