குப்பை லாரி மோதியதில் மாணவிகள் பாதிப்பு மாநகராட்சி கமிஷனர் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக 2 வாரத்திற்குள் மாநகராட்சி கமிஷனர் பதில் அளிக்க வேண்டும், என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போரூர் அடுத்த காரம்பாக்கம், அருணாசலம் நகரை சேர்ந்தவர் விசாலாட்சி (40). இவரது கணவர் செல்வகுமார் (45). தம்பதிக்கு தீபிகா (21), தேவிகா (19) மற்றும் ராதிகா (15) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். செல்வகுமார் குடும்பத்தை  கவனிக்காததால், விசாலாட்சி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து மகள்களை காப்பாற்றி வருகிறார். போரூரில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் தேவிகா 11ம் வகுப்பும், ராதிகா 6ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த 2016 ஜூலை மாதம், 20ம் தேதி காலை தேவிகா, ராதிகா மற்றும் அவர்களது தோழி தியா (11) ஆகியோர் பள்ளி செல்ல, காரம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.  அப்போது அவ்வழியாக சென்ற மாநகராட்சி குப்பை லாரி, கட்டுப்பாட்டை இழந்து, பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த தேவிகா, ராதிகா, தியா ஆகிய மாணவிகள் மீது மோதியது.

பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துமவனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் லோகநாதனை கைது செய்தனர். விபத்தில், தேவிகாவின் இடுப்பு, கால் பகுதிகளில் பலத்த  காயமும், ராதிகா வலது காலில் முறிவும் ஏற்பட்டது. தியா சிறு காயங்களுடன் தப்பினார்.தன் 2 மகள்களின் சிகிச்சைக்காக விசாலாட்சி, பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். மாநகராட்சி எந்த நிவாரணமும் வழங்கவில்லை. மாணவிகள் விபத்தில் ஊனமானதுடன் படிப்பை தொடர முடியாமல் போனது.  இதையடுத்து, தேவிகாவிற்கு வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் ₹10 ஆயிரத்தில் தற்காலிக வேலை அளிக்கப்பட்டது. இந்நிலையில், வளசரவாக்கம் மண்டலத்தில் புதிதாக பதவியேற்ற உதவி கமிஷனரை சந்தித்து தனது நிலை குறித்து முறையிட விசாலாட்சி, வளசரவாக்கம் மண்டல அலுவலகம் வந்தார். ஆனால், அவரை உதவி கமிஷனர்  சந்திக்கவில்லை. அதிகநேரம் காத்திருந்தும் திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் விசாலாட்சி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அவருடைய மகள் தேவிகாவை உள்ளே அழைத்து, உனக்கு வேலை கிடையாது. அலுவலகத்திற்கு  வந்து சத்தம் போட்டால் குடும்பத்தையே சிறையில் தள்ளிவிடுவேன் என மிரட்டி உள்ளார். இதையடுத்து வேறுவழியின்றி தாயும், மகளும் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டனர்.இந்நிலையில் இச்செய்தி கடந்த 13ம் தேதி பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இதைப் பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, நடந்த சம்பவம்  குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சென்னை மாநகராட்சி கமிஷனர் 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

× RELATED வாக்கு எண்ணும் பணி குறித்து தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை