×

சிவகாசி 3வது வார்டில் சாலை வசதியில்லா ‘லோட்டஸ்’ நகர்

சிவகாசி, பிப். 14: சிவகாசி 3வது வார்டில் உள்ள லோட்டஸ் நகரில் பொதுமக்கள் சாலை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
சிவகாசி நகராட்சி 3வது வார்டில் முஸ்லீம் நடுத்தெரு, வேலாயுத ரஸ்தா ரோடு, என்எஸ்சி தெரு, லோட்டஸ் தெரு, ரத்தினம் நகர் பகுதிகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
வேலாயுத ரஸ்தா சாலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டது. ஆனால், அந்த தொட்டி இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இப்பகுதியில் வாறுகால்கள் அனைத்தும் தூர்ந்து கிடப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. லோட்டஸ் நகரில் சாலை மண் சாலையாக உள்ளது. இதனால், மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறுகிறது. வெயில் காலங்களில் புழுதி பறப்பதாலும் மக்கள் சிரமம் அடைகின்றனர்.
நகராட்சி 3வது வார்டு சிறுகுளம் கால்வாய் பகுதியில் முட்செடிகள் மண்டி கிடக்கின்றன. இதனால் மழை காலங்களில், கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முஸ்லீம் நடுத்தெருவில் உள்ள சலவை தொழிலாளர்கள் சமுதாயக்கூடம் முன்புள்ள பாலம் இடிந்து வரத்து கால்வையை மூடியுள்ளது. இதனால், வாறுகால் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
வேலாயுத ரஸ்தா தெருவில் வாறுகால், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. லோட்டஸ் நகரில் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருவதால் சாலை வசதி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Lotus City ,Sivakasi ,3rd Ward Road ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து