×

விருதுநகர் டூ மானாமதுரை மார்க்கத்தில் அகலரயில் பாதை அமைத்தும் ரயில் போக்குவரத்து அதிகமில்லை கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை

அருப்புக்கோட்டை, பிப். 14: விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை பல கோடி ரூபாயில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டும்,போதிய ரயில்கள் இயக்கப்படவில்லை என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை இருந்த மீட்டர் கேஜ் பாதை, அகலரயில் பாதையாக மாற்றப்பட்டு, தினசரி திருச்சி வரை ‘டெமோ’ ரயில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் வாரம் இருமுறை (வியாழன், ஞாயிறு) சென்னைக்கு சிலம்பு எக்ஸ்பிரசும்,  கன்னியாகுமரியிலிருந்து புதுச்சேரிக்கு வாரந்திர ரயிலும் இயக்கப்படுகின்றன. வேறு ரயில்கள் இல்லை. பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளோட்டத்தோட நின்ற அந்தியோதயா ரயில்:தமிழகத்திற்கு 2 வழித்தடத்தில் அந்தியோதயா ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சில நாட்கள் மட்டுமே தாம்பரம்-செங்கோட்டை இடையே அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. சென்னை செல்ல பகல் நேர ரயிலாகவும், கட்டணம் குறைவாகவும் இருந்ததால் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், அந்தியோதயா ரயில் சில நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருமுறை ரயில்வே கால அட்டவணையில் அறிவித்தும் இன்னும் அந்தியோதயா ரயில் இயக்கப்படவில்லை. இதனிடையே, தாம்பரத்தில் இருந்து விருதுநகர்  வழியாக நெல்லைக்கு ஒரு ரயிலும், தாம்பரத்திலிருந்து விழுப்புரம்,  சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை,  காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டைக்கு ஒரு ரயில்  இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை.

இது குறித்து வட்டார ரயில் பயணிப்போர் நலச்சங்கத்தலைவர் மனோகரன்  கூறுகையில், ‘சென்னையில் இருந்து செங்கோட்டை வரை  அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில், சில நாட்களுக்கு  முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி  இயக்கவும், திருச்செந்தூரிலிருந்து  அருப்புக்கோட்டை வழியாக தாம்பரம்  வரையும், செங்கோட்டையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தாம்பரம் வரையிலும்  புதிய ரயில்களை இயக்கவும், அந்தியோதியா ரயிலை அட்டவணைப்படி இயக்கவும்,   தென்னக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை  மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க  ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Tiruchirapalli ,Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...