புல்லலக்கோட்டை சாலை முதல் பாவாலி சாலை வரை அணுகுச்சாலை அமைக்க வலியுறுத்தல்

விருதுநகர், பிப். 14: விருதுநகரில் புல்லலக்கோட்டை சாலை முதல் பாவாலி சாலை வரையிலான ஒரு கி.மீ தூரத்திற்கு இருபுறமும் அணுகுச் சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் இருந்து விருதுநகர் வழியாக கன்னியாகுமரி வரை 10 ஆண்டுகளுக்கு முன் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டது. விருதுநகரின் நுழைவுப்பகுதி வழியாக செல்லும் இந்த சாலையில், புல்லலக்கோட்டை சாலையில் இருந்து பாவாலி சாலை வரை ஒரு கி.மீ தூரத்திற்கு இருபுறமும் அணுகுச்சாலை இல்லை. கவுசிகா ஆறு செல்லும் வழித்தடத்தில் அணுகுச்சாலை இல்லாததால் வடமலைக்குறிச்சி ரோட்டில் உள்ள கலைஞர் நகர் மேட்டுத்தெரு, சின்னமூப்பன்பட்டி, சிவஞானபுரம், பாப்பாகுடி, நந்திரெட்டியபட்டி மற்றும் வடமலைக்குறிச்சி கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் விருதுநகர் வந்து செல்ல, நான்குவழிச்சாலையில் எதிர்புறம் வந்து செல்கின்றனர். இதற்காக நான்குவழிச்சாலை தடுப்புகளை கடந்து செல்கின்றனர்.

மேலும், கவுசிகா ஆற்றுப்பாலத்தின் கீழ்பகுதி வழியாக டூவீலர்களில் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். நான்குவழிச்சாலையில் எதிர்புறம் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்வதால் பகல், இரவு பாராமல் நீரில் கடந்து விருதுநகருக்குள் வந்து செல்கின்றனர். எனவே, நான்குவழிச்சாலை தேசிய ஆணையம் விருதுநகரில் புல்லலக்கோட்டை சாலை முதல் பாவாலி சாலை வரையிலான ஒரு கி.மீ தூரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

× RELATED பாஜ ஆட்சி அமைப்பதை தடுக்க அகிலேஷூடன் கெஜ்ரிவால் பேச்சு