×

சிவகாசியில் பி(இ)றப்பு சான்று அனுமதிக்கு தாமதிக்கும் ஆர்டிஓ அலுவலகம்: பொதுமக்கள் கடும் அவதி

சிவகாசி, பிப். 14: சிவகாசியில் உள்ள ஆர்டிஓ அலவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றுக்கான அனுமதிகான உத்தரவு வழங்குவதில் காலதாமதம் செய்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பிறக்கும் குழந்தைகளை 20 நாட்களுக்குள் பதிவு செய்து விஏஓ, நகராட்சி ஆணையாளர்களிடம் சான்றிதழ் பெற வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் அபராத தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல இறப்புகளையும் பதிவு செய்ய வேண்டும். ஓராண்டு முடிந்தும் பதிவு செய்யாதவர்களுக்கு, நீதிமன்றத்தில் மனு செய்து பிறப்பு, இறப்புகளை விஏஓக்கள், நகராட்சி ஆணையாளர்கள் மூலம் பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

தற்போது ஓராண்டு முடிந்து பதிவு செய்யாதவர்கள் ஆர்டிஓ அலுவலரிடம் மனு தாக்கல் செய்து பிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமங்கள் என்றால் ஆர்டிஓவிடம் மனு கொடுத்து அந்த மனுவை தாசில்தார், விஏஓக்கள் விசாரணை செய்து வழங்கும் சான்று அடிப்படையில் பிறப்பு, இறப்புகளை ஆர்டிஓ பதிவு செய்து சான்று அளிக்க உத்தரவிட வேண்டும். நகர பகுதி எனில் நகராட்சி ஆணையாளருக்கு அனுப்பி சான்று பெறப்பட்டு ஆர்டிஓ மூலம் சான்று வழங்கப்படுகிறது. இதனடிப்படையில், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமனானோர் பிறப்பு, இறப்பு சான்று கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மாதகணக்கில் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அதிகாரிகளை ‘கவனித்தால்’ அவர்கள் முறையாக விசாரணை நடத்தாமல் சான்று வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பொது தேர்வு எழுதும் மாணவர்கள், அரசு போட்டி தேர்வு எழுதுவோர் அவதிப்படுகின்றனர். இதேபோல அரசின் நல திட்ட உதவிகளையும் பெற முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். வாரிசு சான்றுக்கு விண்ணப்பித்த பலர் இறப்பு சான்று பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, ஆர்டிஓ அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு கோரி விண்ணப்பிக்கும் மனுக்கள் மீது முறையான விசாரணை நடத்தி, உடனடியாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : RTO Office ,BP ,
× RELATED நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்;...