மண்ணுக்குள் புதைந்த 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு மூணாறில் பரபரப்பு

மூணாறு,பிப்.14: மூணாறில் தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூணாறில் கொச்சி - தனுஷ்கோடி இடையே ரூ.381 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று காலை மூணாறு காவல் நிலையம் அருகே இப்பணியின் போது ஜேசிபி இயந்திரம் மூலம் மண் எடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த சின்னான், வாசு ஆகியோர் மண்ணுக்குள் புதைந்தனர். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து மண்ணில் இருந்து அவர்களை வெளியே எடுத்தனர்.
நூலிழையில் உயிர் தப்பிய சின்னானுக்கு கால், வாசுவிற்கு இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள், மூணாறு தனியார் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில்,`` மூணாறில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது இதனால் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மண் இளகிய நிலையில் இருந்தது. ஜேசிபி இயந்திரம் மூலம் மண் எடுக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உடைகளை அதிகாரிகள் தருவது இல்லை. எனவே இதுபோன்ற ஆபத்து அரங்கேறி வருகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

× RELATED பெரும்புதூர் அருகே கார் உதிரிபாக...