போடி அருகே பள்ளி மேற்கூரை இடிந்து விழும் அபாயம் பீதியில் மாணவர்கள்

போடி, பிப். 14: போடி அருகே மேலசொக்கநாதபுரம் ஆரம்ப பள்ளியின் ஓடுகள் மேயப்பட்ட மேற்கூரை உடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
போடி அருகே போ.மேசொக்கநாதபுரம் பேரூராட்சியில் மேலசொக்கநாதபுரம், கீழசொக்கநாதபுரம், வினோபாஜிகாலனி, தர்மத்துப்பட்டி,ரெங்கநாதபுரம், கரட்டுப்பட்டி என கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.இப்பகுதியில் வசிக்கும் விவசாய, விவசாயக் கூலித்தொழிலாளர் வீட்டுக் குழந்தைகளுக்காக போடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவக்கப்பட்டது.

பழமை வாய்ந்த கட்டிடத்தில் இயங்கும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 9 ஆசிரியர்களும், 90 மாணவ, மாணவியரும் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியின் வகுப்பறை மேற்கூரை ஓடுகள் பதித்திருப்பதால் கட்டைகள் பழுதாகியும் ஒடுகள் அவ்வப்போது கீழே ஒவ்வொன்றாக வகுப்பறைக்குள் விழுந்து வருகிறது. காற்று காலங்களில் வேகமாக வீசுகின்ற போது தூசி மற்றும் மண் வகுப்பறைகள் விழுவதால் மாணவ, மாணவியர், ஆசிரியர் கண்கள் பாதிக்கும் நிலை உள்ளது.குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீரும் வகுப்பறைக்குள் உள்ளே கொட்டுவதால் மாணவ, மாணவியர் மட்டுமின்றி பாடப் புத்தகம், நோட்டுகள் நனைந்து பாதுகாப்பு இல்லா நிலை ஏற்படுகிறது. எனவே, துவக்கப்பள்ளியில் பழுதான மேற்கூரை இடிந்து உயிர்ப்பலி ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில்...