×

திருப்பூரில் கொசு உற்பத்தியாகும் செயல்படாத செயற்கை நீருற்றுகள்

திருப்பூர், பிப்.14:  திருப்பூர் பழைய பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே உள்ள செயற்கை நீருற்றுகள், செயல்படாமல் இருப்பதால், கொசு உற்பத்தியாகும் மையமாக மாறி வருகிறது.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே, அம்மா உணவகம் அமைந்துள்ள வளாகத்தை, அழகுபடுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் செயற்கை நீருற்று ஏற்படுத்தப்பட்டது. தண்ணீர் ‘பம்ப்பிங்’ செய்யப்பட்டு கற்குவியல் மீது அருவி போல் கொட்டும் வகையில் அமைக்கப்பட்டது. அம்மா உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் அதை கண்டு ரசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதங்களுக்கு முன்பு செயற்கை நீரூற்று செயல்படாமல் போனது. அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்தனர். சில நாட்கள் மட்டுமே இயங்கிய நீருற்று, மீண்டும் பழுதானது. மாதக்கணக்கில் ஆகியும் அதிகாரிகள் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
அதிகாரிகள் தரப்பில் கேட்டால், ‘நீரூற்று இயங்குகிறது’ என்கின்றனர். நேரில் பார்த்தால், காட்சிப்பொருளாகவே தென்படுகிறது. ‘நீரூற்றை’ சுற்றிலும், குப்பை குவியல்கள் குவிந்து கிடக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழை நீரும் நீரூற்று தொட்டியில் தேங்குகிறது.
இதனால் நீருற்று கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது. இதேபோல் பழைய பஸ் நிலையத்தில் உள்ள செயற்கை நீருற்றும் செயல்படாமல் உள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் புகார் எழுந்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே அதிகாரிகள் ஆய்வு நடத்தி, விரைந்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

Tags : springs ,Tirupur ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்