பேரறிவாளன் விடுதலைக்கு மக்களின் ஆதரவு அதிகம் திருப்பூரில் அற்புதம்மாள் பேட்டி

திருப்பூர், பிப்.14: ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய பொதுமக்களிடத்தில் அதிகளவில் ஆதரவு இருப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறினார்.திருப்பூரில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது விடுதலைக்காக ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கவர்னர் கையெழுத்து இடமாமல் காலம் தாழ்த்துவது குறித்து  மக்களை சந்தித்து வருகிறேன். இதன் ஒருபகுதியாக திருப்பூர் வந்துள்ளேன். சட்டம் சொல்லியும், அரசு முடிவு எடுத்தும் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் கையொப்பம் இடவில்லை. இது குறித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் கவர்னர் மவுனம் காத்துவருகிறார்.

பேரறிவாளன் உட்பட ஏழு பேர்  28 ஆண்டு முழுமையாக தண்டனை அனுபவித்துள்ளனர். இதையடுத்து, நீதிமன்றம் சொல்லியுள்ளது 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசு, ஆளுநர் கையொப்பத்துடன் விடுதலை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. இதே நீதிமன்றம் தான் முன்னர் குற்றவாளி என்று சொன்னதை தலைவணங்கி ஏற்றுக் கொண்டோம். இப்பொழுது அதே நீதிமன்றம் விடுவிக்கச் சொல்லியும் அது நடைபெறவில்லை.

 இந்த ஒரு வழக்கில் தான் மூன்று முறை விடுதலை அறிவிக்கப்பட்ட பின்னரும் சிறைவாசிகளாகவே இருக்கின்றனர். இது ஏன் என்று புரியவில்லை. ஆகவே, மக்களிடம் ஆலோசனை கேட்டு ஆளுநரை எவ்வாறு அனுகுவது என்று வந்துள்ளேன். என்னுடைய வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் பொது மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வந்துள்ளேன். கவர்னர் மனது வைத்தால் அனைவரும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இதுவரையில் 12 மாவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன். ஆகவே, அனைத்து மாவட்ட மக்களையும் சந்தித்த பின்னர் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து ஆளுநரிடம் ஒப்புதல் வாங்க முடிவு செய்துள்ளேன். அமைச்சரவை கூட்டி முடிவு எடுப்பதே தமிழக ஒட்டு மொத்த மக்களின் உணர்வுதான். தமிழகம் முழுவதும் பொது மக்கள் அனைவரும் பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவு அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: