கடன் தருவதாக ஏமாற்றும் போலி நிறுவனங்கள் அதிகரிப்பு

பரமக்குடி, பிப்.14: பரமக்குடி பகுதியில் போலியாக இயங்கி வரும் நிதி நிறுவனங்கள் லோன் கொடுப்பதாக கூறி பெண்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் புதிது புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள் தனிநபர், தொழில், தங்கநகை, தினசரி, மாதம், வார சீட்டுகள் எனற பெயரில் பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களை குறிவைத்து பணம் பறித்து வருகின்றனர். பரமக்குடியில் கண்ட இடங்களில் பெரிய பெரிய நிறுவனங்களின் பெயர்களிலும், புதிய பெயர்களிலும் சிறிய கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து பணம் கொடுப்பதும், கட்டவில்லை என்றால் சொத்துக்களையும், நகைகளையும் பறித்து வருகின்றனர்.இதுபோன்ற ஏமாற்றுபவர்களை நம்பி மகளிர் மன்றத்தை சேர்ந்த பெண்கள் கூட்டாக பணம் பெறுவதற்கு நிதி நிறுவனங்களுக்கு முன் கால் கடுக்க காத்து கிடக்கின்றனர். பணம் பெற்று குறைந்த காலத்தில் இருமடங்காக தருவதாக கூறி, மக்களை ஏமாற்றும் நோக்கில், குற்றப்பின்னணி கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாமல் இருக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மகளிர் மன்றங்களை சேர்ந்த பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பகுதியில் பல இடங்களில் நிதிநிறுவனங்களுக்கு முன் பெண்கள் பணத்திற்காக காத்திருப்பது கண்கூடாக பார்க்க முடிகிறது. நிதி நிறுவனம் என்ற பெயரில் பணத்தை கொடுத்து விட்டு வீடு,சொத்துக்களை எழுதி வாங்கி கொள்கின்றனர். பணத்தை குருகிய காலத்தில் இரண்டு மடங்காக தருவதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை பொற்றுகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. பணத்தை முதலீடு செய்வதற்கு முன் தீர விசாரிக்க வேண்டும். அரசு நிதி நிறுவனம் மற்றும் அரசு வங்கிகளில் முதலிடு செய்யவேண்டும்’’ என்றார்.

× RELATED பரமக்குடி பகுதியில் கடன் தருவதாக ஏமாற்றும் போலி நிறுவனங்கள் அதிகரிப்பு