×

மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களில் மனு கொடுத்தால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு

சிவகங்கை, பிப்.14: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பெயர்களில் குறைதீர் மனுக்கள் பெறும் கூட்டம் நடத்தினாலும் குறைகள் பெரும்பாலும் தீர்க்கப்படாத நிலையே காணப்படுகிறது.வாரந்தோறும் திங்கள் கிழமை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இவை தவிர அதிமுக அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விழாக்களிலும் பொதுமக்களை அழைத்து வந்து மனுக்கள் வாங்குகின்றனர். அவ்வப்போது அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. திங்கள் கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் காலை 10 மணியிலிருந்து மதியம் வரை சுமார் 300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்படுகின்றன. கோடைகாலத்தில் குடிநீர் கிடைக்காமல் கிராமம் கிராமமாக அலைவது, உப்பு நீரை குடிப்பது, சுத்திகரிக்கப்படாத ஆழ்குழாய் போர்வெல் நீரை குடிப்பது என குடிநீர் கிடைக்காமல் ஏராளமான கிராமத்தினர் அவதியடைவதாக மனுக்கள் அளிக்கப்படுகிறது.

இந்த குடிநீரும் கிடைக்காமல் ஆற்றுக்குள் பள்ளம் தோண்டி பல மணி நேரம் காத்திருந்து குடிநீர் எடுக்கும் கிராமத்தினரும் தங்கள் பிரச்னைக்கு தீர்வுகான காத்திருக்கின்றனர். சாலை வசதி, கண்மாய், கால்வாய், அரசு இடம் ஆக்கிரமிப்பு, சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு, சுடுகாட்டிற்கு பட்டா போட்டு எடுத்துக்கொண்ட தனியார் என பல்வேறு பொதுக்குறைகளை சரிசெய்ய மனு அளிக்கின்றனர்.தனிநபர் பிரச்னைகளான முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, ரேசன் கார்டு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் மனு அளிக்கின்றனர். ஆனால் எத்தனையோ முறை மனு அளித்தும் குடிநீர் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளன. இடம் ஆக்கிரமிப்பு குறித்த மனுக்களை வருவாய்த்துறையினர் கண்டுகொள்வதில்லை. அளிக்கப்படும் மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் ஏற்கனவே எந்த அலுவலகத்தில் தீர்வு கிடைக்காமல் உயர் அலுவலகத்தில் வந்தார்களோ அதே அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது.

மனு கொடுத்து, மனு கொடுத்து அலையும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது: மக்களின் பொதுப்பிரச்னைகளுக்காக மனு கொடுத்தால் எதையும் கண்டுகொள்வதில்லை. குடிநீர் பிரச்னையால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புகார் அளித்தால் அங்கு சென்று பார்ப்பது கூட கிடையாது. ஆழ் குழாய் குடிநீருடன் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்காமல் அந்த நீரை குடித்தால் உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால் அது குறித்தும் கண்டுகொள்வதில்லை. இடஆக்கிரமிப்பு நடவடிக்கையில் வருவாய்த் துறையினருக்கும் பங்கு இருப்பதால் அவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த மனுக்களுக்கு உருப்படியாக தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றார்.

Tags : meetings ,
× RELATED மோசமான வானிலை மபியில் தங்கினார் ராகுல் காந்தி