சட்டமன்ற கூட்டத் தொடரில் காலமுறை ஊதியம் தொடர்பான அறிவிப்பு ஊர்ப்புற நூலகர்கள் எதிர்பார்ப்பு

ராமநாதபுரம், பிப்.14:  பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையில் ஊர்ப்புற நூலகர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆயிரத்து 800 ஊர்ப்புற நூலக பணியிடம் உருவாக்கப்பட்டு கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி விதிகள் உருவாக்கப்படாததால், இதுவரை காலமுறை ஊதியம் வழங்கப்படாமல் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்திலேயே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் பணி வரன்முறை, பதவி உயர்வு உள்ளிட்ட எவ்வித பலன்களும கிடைப்பதில்லை. காலமுறை ஊதிய விகிதத்திற்கு மாற்ற வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிடம் மனுக்கள் அளித்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் தற்போதைய சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என ஊர்ப்புற நூலகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தப்பணத்தை வைத்து எப்படி வாழ முடியும். போதிய ஊதியம் இல்லாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம். பணி ஓய்வு பெறும் போது அளிக்கப்படும் பணப்பலன், ஓய்வூதியம் உள்ளிட்ட எவ்வித பலனும் கிடையாது. இதுகுறித்து பல முறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றனர்.

× RELATED மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில்...