×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.14:  கோட்டை கரை ஆற்றுப்பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தாசில்தார் தலைமையிலான வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள கோட்டைகரை ஆற்றில் புல்லமடை வருவாய் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். கடந்த மூன்று மாதங்களாக மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் மாட்டுவண்டி தொழிலை நம்பி வாழ்ந்த ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. அனைவரும் ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் புகார் அளித்தனர்.
அதன் பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலின் பேரில் பொதுப்பணித்துறை மற்றும் புள்ளியியல் துறை அனுமதியோடு ஒவ்வொரு மாட்டு வண்டியும் அதற்கான அரசு நிர்ணயம் செய்த கட்டண தொகையை செலுத்தி விட்டு ஆற்று மணலை அள்ளி கொள்ளலாம் என்ற ஒரு சில நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. இதற்காக அனுமதியளித்துள்ள ஆற்றுப்பகுதியை தாசில்தார் தமீம்ராஜா தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடங்களில் மணல் எடுப்பது, முறையான அனுமதி சீட்டுகளை பெறாமல் மணல் எடுப்பதாக கூறி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் ஏராளமான மாட்டு வண்டிகளை சிறைபிடித்து காவல் நிலையத்தில் உள்ளது.
இந்த பகுதியில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மணல் தட்டுப்பாட்டால் ஏராளமான கட்டிட பணிகள் முழுமையடையாமல் அரையும் குறையுமாக நிற்கிறது. ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். தற்போது மாட்டு வண்டிகள் மூலமாக மணல் எடுப்பதற்கு அனுமதி அளித்ததற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இருந்தபோதும் பொதுமக்கள் சார்பாக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர். மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதற்கு அனுமதி கொடுத்தது போல் டிராக்டர்கள் மூலமும் மணல் எடுப்பதற்கு உரிய அனுமதி வழங்கினால், கட்டிடம் கட்டுபவர்களுக்கு உடன் மணல் கிடைப்பதுடன் அதிகமான தொகை செலவழிக்க கூடிய சூழல் வராது என்றும் கூறி வருகின்றனர்.
விதிமீறினால் நடவடிக்கை
தாசில்தார் தமீம்ராஜா கூறுகையில், ‘‘மாட்டு வண்டிகளை வைத்து தொழில் செய்து வருபவர்களின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட நிர்வாகம் கோட்டைகரை ஆற்றில் புல்லமடை குருப்பிற்கு உட்பட்ட குறிப்பிட்ட புலப்பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளிச் செல்ல அனுமதியளித்துள்ளனர். மாட்டு வண்டியில் மணல் எடுத்துச் செல்பவர்கள் அனைவரும் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். காலை முதல் மதியம் 1 மணி வரை அனுமதி சீட்டு வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்பட்ட அனுமதி சீட்டை பெற்ற மாட்டு வண்டிகளில் மாலை 3 மணிக்குள் ஆற்றை விட்டு வெளியேறி விட வேண்டும். சட்ட திட்டங்களை மதிக்காமலும், அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு விட்டு, வேறு எந்த இடத்திலாவது மணல் அள்ளினால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : river ,RS Mangal ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...