குளத்தை பாதுகாக்க மனு கொடுத்தும் மக்களின் நலனில் கொஞ்சம் கூட அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை

தொண்டி, பிப்.14: தொண்டி அருகே கானாட்டாங்குடி கிராமத்தில் உள்ள குடிதண்ணீர் குளத்தை சுற்றிலும் வேலி இல்லாததால், கால்நடைகள் இறங்கி விடுவதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் அதிகாரிகள் இக்குளத்தை சுற்றிலும் முள்வேலி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி அருகே கொட்டகுடி ஊராட்சி கானாட்டாங்குடி கிராமத்தில் கடந்த சில வருடங்களாக கடுமையான குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பிரச்னையை போக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாரி தண்ணீரும் குடம் 15 ரூபாய்க்கு விற்பதாக தெரிகிறது. முற்றிலும் விவசாயிகள் மற்றும் நடுதர வர்க்கத்தினர் வசிக்கும் இப்பகுதியில் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் இப்பகுதி மக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ள பொது குளத்தில் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்த தண்ணீரை சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செலவு செய்து தேக்கி வைத்துள்ளனர். இக்குளத்தில் தான் புதுப்பட்டினம், தோப்பு, சேனதிகோட்டை, கடுக்களுர் உள்ளிட்ட கிராம மக்களும் தினமும் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.
தற்போது இக்குளத்தை சுற்றிலும் வேலி இல்லாததால் ஆடு, மாடு குளத்தில் இறங்கி நாசம் செய்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தாலுகா மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் தண்ணீர் குறையை போக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், குளத்தை சுற்றிலுமாவது வேலி அமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம தலைவர் அண்ணாமலை கூறியது, தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயத்திற்கு இருந்த தண்ணீரை குடிப்பதற்கு சேமித்து வைத்துள்ளோம். தண்ணீருக்குத்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதுகாப்பிற்காவது வேலி போட்டு தாருங்கள் என்று கலெக்டர் வரையிலும் மனு கொடுத்து விட்டோம் எவ்வித பயனும் இல்லை. மக்களின் நலனில் கொஞ்சம் கூட அக்கறை காட்ட வில்லை. விரைவில் குளத்தை சுற்றிலும் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

× RELATED இருதரப்பு மோதல் அதிகாரிகள் சமரசம்