×

நோய் ஆபத்து உள்ளதால் டேங்கை திறந்து குடிநீர் எடுக்க கூடாது அதிகாரிகள் வேண்டுகோள்

ராமநாதபுரம், பிப்.14:  ராமநாதபுரம் அருகே கருங்குளம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையால் காவிரி கூட்டு குடிநீர் டேங்கை திறந்து பொதுமக்கள் குடிநீர் சேகரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்க கடந்த 2007ல் ரூ.617 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கின. இதற்காக ராட்சத சிமெண்ட் குடிநீர் குழாய்கள் கிராம, நகர பகுதிகளில் பதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பல நகராட்சி, ஊராட்சிகளில் முறையாக குடிநீர் கிடைப்பதில்லை.
இதனால் பல இடங்களில் பொதுமக்களே குடிநீர் டேங்கை திறந்து குடிப்பதற்கும், துணி துவைக்கவும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் டேங்க் பகுதியிலேயே தண்ணீர் எடுத்து அதில் குளிக்கின்றனர். இதனால் குடிநீர் விரையமாவதோடு, தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் அருகே கருங்குளம் பகுதியில் பல மாதங்களாக குடிநீர் பிரச்னை உள்ளது. தற்போது வரை அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ராமநாதபுரம்-பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் டேங்கை திறந்து அப்பகுதி பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் குடிநீர் எடுத்து வருகின்றனர்.
குடிநீர் டேங்கின் அருகே அலசி ஊற்றப்படும் குடிநீர் மீண்டும் டேங்கின் உள்ளே செல்கிறது. சுகாதாரமற்ற முறையில் உள்ள குடிநீரையே பிற இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் டேங்கை திறந்து குடிநீர் எடுப்பதை தடுத்து, உரிய முறையில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்று அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, பல இடங்களில் டேங்கை திறந்து பொதுமக்களே குடிநீர் எடுத்து வருகின்றனர். டேங்கின் அருகிலேயே குளிக்கவும் செய்வதால் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க பொதுமக்கள் இதுபோன்ற தவறான செயல்களை செயல்களை செய்ய கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிராம பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் குடிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை