முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் வறட்சியால் மிளகாய், மல்லி நிலக்கடலை விவசாயம் பாதிப்பு  உலர்களம் இன்றி விவசாயிகள் அவதி  பயிர்காப்பீடு வழங்கப்படுமா?

சாயல்குடி, பிப். 14:  முதுகுளத்தூர், கடலாடி தாலுகாவில் வறட்சியால் மிளகாய், மல்லி, நிலக்கடலை பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வறட்சி நிவாரணம் மற்றும் பயிர்காப்பீடு தொகை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், அதற்கு அடுத்தப்படியாக மிளகாய், மல்லி, பருத்தி, நிலக்கடலை, கம்பு, சோளம் போன்ற  தானியவகை பயிரிடப்படுகிறது. குறிப்பாக கடலாடி. முதுகுளத்தூர் தாலுகாவில் இதம்பாடல், கடுகுசந்தை, மேலச்செல்வனூர், தரைக்குடி, டி.எம், கோட்டை, உச்சிநத்தம், கொண்டுநல்லான்பட்டி, கிடாத்திருக்கை, சித்திரங்குடி, மேலச்சிறுபோது, சவேரியார்பட்டணம், கீழத்தூவல், மகிண்டி, மீசல், பொசுக்குடி, கீரனூர், கீழக்கொடுமலூர், தட்டனேந்தல், சாம்பக்குளம் உள்ளிட்ட  50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் முக்கிய பயிராக மிளகாய் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

ஆண்டுதோறும் பருவமழை பெய்யும் ஜூன், ஜூலை மாதங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் துவங்குவது வழக்கம். இந்தாண்டு பருவமழை பொய்த்து போனது. ஆனால் காலம் கடந்து மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மிளகாய், மல்லி, நிலக்கடலை போன்ற பயிர்களை காலம் கடந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் பயிரிட துவங்கினர். களையை அகற்றுதல், பூச்சிக் கொல்லி மருந்து அடித்தல், உரம் போடுதல் போன்ற பணிகளை செய்து வந்தனர். இதனால் பயிர்கள் வளர துவங்கியது.

ஆனால் தொடர்ந்து மழை பெய்யாததாலும், கண்மாய், குளங்களில் மழைதண்ணீர் தேங்காததாலும் பயிர்கள் வெயிலுக்கு கருக துவங்கியது. இதனால்  வட்டிக்கு பணம் வாங்கி பல ஆயிரம் ரூபாய் செலவழித்து காய்காய்க்கும் தருவாயில் கருகி வரும் செடிகளை டிராக்டர்களில் விலைக்கு தண்ணீர் வாங்கி, கூலி ஆட்கள் மூலம் செடி தூர்களில் தெளித்து வந்தனர்.  இதனால் சில இடங்களில் மிளகாய், மல்லி மட்டும் ஓரளவிற்கு வந்தது. இதனை உலர்த்துவதற்கு கிராமங்களில் உலர்களம் இல்லாததால், விவசாயிகள் சுடுகாடு போன்ற காலியிடங்களில் காய வைக்கின்றனர், மண், குப்பை, தூசு போன்றவையால் மிளகாய் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

எனவே கிராமங்களில் மிளகாய் போன்ற தானியங்களை உலர்த்துவதற்கு  உலர்தளம் அமைக்க வேண்டும். கடும் வறட்சியிலும், விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி காப்பாற்றப்பட்ட செடியின் மூலம் வந்த மிளகாய்க்கு வெளி மார்க்கெட்டில் விலை குறைவாக உள்ளது. எனவே அரசு போதிய விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் மிளகாய் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த மூன்று வருடங்களாக காப்பீடு தொகை செய்யப்பட்ட மிளகாய்க்கு காப்பீடு தொகை வழங்கவில்லை. அதனை விரைந்து வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாவில் நெல் விவசாயத்திற்கு,  அடுத்தப்படியாக மிளகாய் விவசாயம் செய்யப்படுகிறது. போதிய மழையின்றி கடந்த 4 வருடங்களாக மிளகாய் விவசாயம் பொய்த்து போனது. கடந்தாண்டு 8ஆயிரத்து 218 ஹெக்டேரில்  பயிரிடப்பட்ட மிளகாய் பயிர்களுக்கு, சுமார் 10 ஆயிரத்து 444 விவசாயிகள், அந்தந்த பகுதி கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் ஏக்கருக்கு ரூ.960 முதல் ரூ.1010 வரை பிரிமீயம் செலுத்தினர். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளாகியும், காப்பீடு தொகை வழங்கப்பட வில்லை.

இந்நிலையில் இந்தாண்டு மிளகாய் பயிர்களுக்கு பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் வங்கிகளில் காப்பீடு தொகை கட்டினாலும் கூட, காப்பீடு தொகை வருமா என சந்தேகம் உள்ளது. எனவே கடந்தாண்டு காப்பீடு தொகையாவது மாவட்ட நிர்வாகம் வழங்க நடவடிக்கை வேண்டும். மேலும் கடலாடி தாலுகாவில் நிலக்கடலையும், மல்லியும், முதுகுளத்தூர் தாலுகாவில் மிளகாயும், மல்லியும் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டது, வறட்சியால் அப்பயிர்களும் பாதிக்கப்பட்டது. எனவே மிளகாய் போன்று நிலக்கடலை, மல்லிக்கும் பயிர்காப்பீடு செய்ய வழிவகை செய்யவேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED நிலக்கடலையில் பூச்சி மேலாண்மை அவசியம் வேளாண்துறை அட்வைஸ்