ரஜினி ரசிகரை வெட்டியது யார்? போலீஸ் தீவிர விசாரணை

சேலம், பிப்.14: சேலத்தில் ரஜினி ரசிகரை ஓட ஓட அரிவாளால் வெட்டியவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் கடும் திணறலுக்கு ஆளாகியுள்ளனர்.சேலம் ஓமலூர் அருகேயுள்ள கருக்கல்வாடியை சேர்ந்தவர் ரஜினி பழனிசாமி (49). தீவிர ரஜினி ரசிகரான இவர் அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள டிராவல்ஸ் ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் காலை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை ஓட ஓட வெட்டியது. இதில் சாக்கடைக்குள் விழுந்து ஒளிந்து கொண்டதால் உயிர் பிழைத்தார். தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவர் இரும்பாலை காவல் நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவில் இருந்து வந்தார். திருட்டு பொருட்களை வாங்கிய விவகாரத்தில் சிக்கியதால், அவரை அதிலிருந்து போலீசார் நீக்கி விட்டனர். அதன்பிறகு போலீஸ் இன்பார்மராக மாறினார். அதே நேரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை கொச்சை கொச்சையாக விமர்சனம் செய்து வந்தார். இதனால் சேலம் கிரைம் பிரிவில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் தன்னை கிரைம் பிரிவு எஸ்ஐ என எல்லோரிடமும் கூறி வந்துள்ள தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழனிசாமி, தன்னை வெட்டியவர் வீரமணி என கூறியதால், வீரமணி என யாராவது இருக்கிறார்களா? என போலீசார் விசாரித்தனர். அதேபோல், பழனிசாமியின் செல்போனுக்கு பேசியவர், போலீசுக்கு நீ இன்பார்மராக இருக்கலாம்,  நாளைக்கு உன்னை வெட்டுவோம். போலீஸ் வந்து உன்னை காப்பாற்றுகிறதா பார்ப்போம்’ என கூறியதையும் அவர் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த எண் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அது நெட்கால் மூலம் வந்த அழைப்பு என தெரியவந்துள்ளது.
இதனால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அவரால் காட்டி கொடுக்கப்பட்டவர்கள் வெட்டினார்களா? அல்லது தொடர்ந்து அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த யாராவது பேசினார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போனுக்கு யாரெல்லாம் பேசினார்கள் என்ற தகவலையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

× RELATED திருப்போரூரில் தனியார் நகைக்கடன்...