நாமக்கல்லில் பரபரப்பு காரில் 40கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

நாமக்கல், பிப்.14: நாமக்கலில் காரில் 40 கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.நாமக்கல்லில் நேற்று மாலை, போக்குவரத்து சப்இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் நேதாஜி சிலை அருகில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேந்தமங்கலம் ரோட்டில் இருந்து வந்த ஒரு கார், ஒருவழி பாதையில் அத்துமீறி சென்றது. இதையடுத்து அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும், காரில் இருந்த 2 பேரும் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். இதை கண்ட போக்குவரத்து போலீஸ்காரர் சவுந்தரராஜன் இருவரையும் விரட்டிச் சென்றார். ஆஞ்சநேயர் கோயில் அருகே வைத்து ஒருவரை மடக்கி பிடித்தார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். போக்குவரத்து சப்இன்ஸ்பெக்டர் சபாபதி, காரை சோதனை செய்தபோது, பின்சீட்டில் சாக்கு மூட்டைகளில் 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரையும் பிடிபட்ட வாலிபரையும் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். போலீசாரின் விசாரணையில், பிடிபட்டவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த பிரபாகரன்(25) என்பதும், தப்பி ஓடியவர் நாமக்கல் அருகே மணியனூரை சேர்ந்த சீனிவாசன்(30)  என்பதும் தெரியவந்தது. இது குறித்து நாமக்கல் போலீசார், சேலம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நாமக்கல் வந்து, பிடிபட்ட பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 40 கிலோ கஞ்சாவின் மதிப்பு ₹40 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.


× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது