மாவட்டத்தில் விளைச்சல் அதிகரிப்பால் சுரைக்காய் விலை வீழ்ச்சிமாட்டுக்கு தீவனமாக போடும் விவசாயிகள்

நாமக்கல், பிப்.14: நாமக்கல்லில் சுரைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் மாட்டுக்கு தீவனமாக போடுகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தில் லத்துவாடி, அணியாபுரம், கோனூர், கந்தம்பாளையம், ராசிபாளையம் மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு சுரைகாய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நாட்டு சுரைக்காய் குறித்து அணியாபுரத்தை சேர்ந்த விவசாயி பிரேம் கூறியதாவது: சுரைக்காய்க்கு மிகக்குறைந்த அளவு தண்ணீர்  போதுமானது. பயிரிட்ட 45 நாட்கள் கழித்து காய்களை அறுவடை செய்யலாம். இப்பகுதிகளில் பாம்பு, வால் மற்றும் குண்டு என 4 வகைகள் இருந்தாலும் பாம்பு மற்றும் குண்டு சுரைக்காய்க்கு தான் கிராக்கி அதிகம்.

நாமக்கல் சந்தைகளில் ஒரு கிலோ சுரைக்காய் ₹5க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வியாபாரிகள் எங்களிடம் ஒரு கிலோ சுரைக்காய் ₹2க்கு வாங்கி செல்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் ஒரு கிலோ ₹15க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை நம்பி விவசாயிகள் அதிகளவில் சுரைக்காய் பயிரிட்டனர். இதனால், விலை கடும் வீழ்ச்சியடைந்து விட்டது. சுரைக்காய் பயிரிட ஏக்கருக்கு ₹1000 ஆகிறது. ஆனால், தற்போது விலை வீழ்ச்சியால் எங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. எனவே, சுரைக்காயை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டுள்ளோம். மேலும் சிலர், தங்களது கால்நடைகளுக்கு உணவாக தருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

× RELATED கடலூர் மாவட்டத்தில் கருகும் குறுவை...