வாடிப்பட்டியில் தண்ணீர் பற்றாக்குறையால் பால் பிடிக்கும் பயிர்கள் கருகுகின்றன

வாடிப்பட்டி, பிப். 14: வாடிப்பட்டி பகுதியில் இருபோக சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் கருகும் அபாயம் உருவாகியுள்ளது என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வேதனை தெரிவித்தனர்.
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மண்டல துணைதாசில்தார் ரவிச்சந்திரன் தலைமை வகிக்க, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்லையா முன்னிலை வகித்தார். விவசாயி ஜெகத்ரச்சகன் வரவேற்றார். கூட்டத்தில், ‘‘இருபோக சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு முறைபாசனத்தில் மார்ச்.15 வரை பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் முழுமையாக வந்தால் தான் விளைச்சல் காணமுடியும். ஆனால் தற்போது அந்த முறைபாசனத்தில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் நிறுத்தப்பட்டு விடுவதால் நீரேத்தான், போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. அதனால் பயிர்கள் பால்பிடித்து கதிர்விடும் நேரத்தில் கருகி சாவியாகும் அபாயம் உருவாகியுள்ளது. கடந்தமுறை முதல்போக சாகுபடி செய்த போது அறுவடை நேரத்தில் கஜா புயல் பாதிப்பால் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகினார்கள். இந்தமுறை இருபோக சாகுபடியிலாவது பயிர்களை காப்பாற்றினால் முழுபயனடைவார்கள். மேலும் தற்போது தேவையான அளவில் தண்ணீர் இருந்தும் பொதுப்பணித்துறை திறப்பதில் அலட்சியம் காட்டுகிறது’’ என விவசாயிகள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரி, ‘‘தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதலாக இருமுறை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

× RELATED விலை குறைவால் பறிக்காமல் செடிகளில் வீணாகும் பப்பாளி