அமைச்சர் திறந்து வைத்த சுகாதார நிலையத்தில் ‘அடிப்படை’ இல்லை நோயாளிகள் கடும் அவதி

மதுரை, பிப். 14: அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து 5 மாதமாகியும் மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின், மதுரை மேற்கு தொகுதியான விராட்டிபத்தில் மாநகராட்சி சார்பில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2010 முதல் இயங்கி வருகிறது. இங்கு கடந்தாண்டு பு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதில் 24 படுக்கை வசதிகள், மகப்பேறு, ஸ்கேன், மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனை கட்டப்பட்டது. புதிய மருத்துவமனையை கடந்த 5 மாதத்திற்கு முன்பு அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
Advertising
Advertising

இந்த மருத்துவனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மாநகராட்சி பகுதியில் இருப்பதால், பக்கத்தில் உள்ள ஊராட்சி பகுதியான ஏற்குடி, அச்சம்பத்து உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். குறிப்பாக தனியார் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை அதிக கட்டணம் என்பதால் இங்கு அதிகளவில் மகப்பேறு சிகிச்சைக்காக பெண்கள் வருகின்றனர்.

மருத்துவமனை திறப்பு விழாவில், இது மாநகராட்சி பகுதியாக இருந்தாலும், புறநகர்பகுதியுடன் இணைந்து இருப்பதால் இந்த மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், 24 படுக்கைகள், மகப்பேறுக்கான கருவிகள், ஸ்கேன், ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதியும் உடனே ஏற்படுத்தப்படும் எனஅமைச்சர் உறுதியளித்தார். ஆனால், அனைத்து வசதிகளும் ஏற்படுத்த தேவையான இடவசதி இருந்தும் இதுவரை படுக்கைக்கான கட்டில், சிகிச்சைக்கான மருத்துவ கருவிகள் ஏதும் வரவில்லை.

இதுகுறித்து சமூக ஆர்வலர் முத்துக்கருப்பன் கூறும்போது, ‘‘10 ஆண்டுகளாக இயங்கி வந்த  இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெறுவதால், அவர்களுக்கு தேவையான மருந்து,  மாத்திரை கொடுக்கப்படுகிறது. இந்த பகுதியை சேர்ந்த கர்ப்பம் தரித்த பெண்கள் பதிவு செய்ய 3 கிமீ தூரத்தில் உள்ள பெத்தானியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவர்களுக்கு அலைச்சல் ஏற்படுகிறது. இங்குள்ள புதிய மருத்துவமனையில் அனைத்து வசதியை ஏற்படுத்தினால் இந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஸ்கேன், லேப், மருத்துவமனைக்கு தேவையான நர்சு மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. போதிய அளவு ஊழியர்கள் இல்லாமல் மருத்துவமனை இயங்குகிறது. அமைச்சர் தலையிட்டு, அவர் தொகுதியில் உள்ள இந்த மருத்துவனைக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றார்.

Related Stories: