100 நாள் வேலை கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல் உசிலம்பட்டி அருகே பரபரப்பு

உசிலம்பட்டி, பிப். 14: நூறு நாள் வேலை கோரி உசிலம்பட்டி அருகே மாற்றுத்திறனாளிகள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் பெருமாள்கோவில்பட்டி பஸ்நிறுத்தத்தில் 100 நாள் வேலை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் காட்டுராஜா, கிளைத்தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘அல்லிகுண்டம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை கேட்டு பலமுறை ஒன்றிய நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தி வந்தோம். கடந்த ஜன.26ம் தேதி குடியரசு தின விழாவில் நடந்த கிராமசபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக 100 நாள் வேலை கோரி மனு அளித்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆணையாளரிடம் கேட்டபோது, அப்படி ஒரு மனு எனக்கு வரவே இல்லை என பதிலளித்துள்ளார். குடியரசு தினவிழா கிராமசபை கூட்டத்தில் அளித்த மனுவிற்கே பதிலே இல்லை. அப்போது மற்ற தினங்களில் நடக்கும் கிராமசபை கூட்டங்கள் அனைத்தும் கண்துடைப்பாகவும், ஊராட்சி நிர்வாகிகள் தேவைக்காகவே நடத்தப்படுகின்றன’’ என குற்றம்சாட்டினர்.

தகவலறிந்ததும் பேரையூர் டியுஸ்பி சூரக்குமாரன், இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி தலைமையிலான போலீசார் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி அதிகாரிகள், 100 நாள் வேலை வழங்குவதாக உறுதியளித்தனர். அதன்பிறகே மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: