×

குடிநீர் கேட்டு வந்த மக்கள் அலைக்கழிப்பு

வேடசந்தூர், பிப். 14: வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்திற்கு குடிநீர் கேட்டு வந்த மக்களை அதிகாரிகள் அலைக்கழித்ததாக புகார் எழுந்துள்ளது.
வேடசந்தூர் நல்லமண்ணர் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மனியம்பட்டியில் 50 வீடுகளுக்கு மேல் உள்ளன. இங்கு உள்ள வீடுகளுக்கு முறையாக தண்ணீர் வருவது இல்லை என்றும், அதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று ஊராட்சி எழுத்தாளரிடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று மதியம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்துக்கு வந்தனர். அங்கு பொதுமக்களின் குறைகளை கேட்க எந்த அதிகாரியும் இல்லை.இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள், வெறுப்படைந்து அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த அதிகாரிகள் தண்ணீர் தேவை என்றால் அந்த பக்கம் கிணற்று உள்ளது, அங்கு சென்று எடுத்துச் செல்லுங்கள் என்று பொது மக்களை கேலி, கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது.

இதைக் கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தங்களின் குறையை சொல்ல வந்தால் அதனை கேட்க ஆள் இல்லை. அதற்கு பதிலாக எங்களை அவமானபடுத்துகின்றனர். எம்.எல்.ஏ. எம்.பி. குறைகள் கேட்க மட்டும் வந்து செல்கின்றனர். ஆனால் குறைகளை சரி செய்ய முயற்சி செய்வதில்லை. பிறகு எதற்கு குறைகள் கேட்டு வரவேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இனிமேல் எங்கள் பகுதிக்கு யாரும் ஓட்டு கேட்டு வரக்கூடாது என்று ஆத்திரத்துடன் கூறி சென்றனர்.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்