பழநியில் பிளாஸ்டிக் தடை இல்லை கண்டுகொள்ளாத நகராட்சி: விற்பனை அமோகம்

பழநி, பிப். 14: பழநியில் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பிளாஸ்டிக் பைகளின் விற்பனை தடையின்றி நடக்கிறது.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு பெருமளவு குறைந்து, துணிப்பைகள் மற்றும் பாத்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ஆனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் பழநியில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தாரளமாகவே உள்ளது. அதிகாரிகளின் பாராமுகத்தால் கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் விற்பனை தடையின்றி நடந்து வருகிறது. இதுகுறித்து நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி பெட்காட் பழனிச்சாமியிடம் கேட்டபோது கூறியதாவது:
Advertising
Advertising

பிளாஸ்டிக் பைகளுக்கான தடை அறிவிப்பு வந்தபோது பழநி நகரிலும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. ஆனால், நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. காந்தி மார்க்கெட்டில் உள்ள 2 மொத்த பிளாஸ்டிக் பைகள் விற்பனைக் கடைகள் பூட்டப்பட்டிருந்தாலும், அங்கு விற்பனை தாராளமாகவே நடந்து வருகிறது.

நகராட்சி அதிகாரிகள் சிலரின் ஆசியுடன் நடைபெறுவதாக கூறப்படுகிறது. பொதுமக்களே தங்களை மாற்றிக்கொண்டு மாற்று பொருட்களான துணிப்பைகள், கட்டைப்பைகள், பாத்திரங்கள் போன்றவற்றை கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டனர்.

ஆனால், நகராட்சி அதிகாரிகள் சிலரின் லாப நோக்கின் காரணமாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு மீண்டும் துவங்கி உள்ளது. மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை இடமாறுதல் செய்து பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி கடையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். நடவடிக்கை கடுமையாக இருந்ததால் தவறுகள் குறையும். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அதிகாரிகளின் அடாவடிதனத்தை கண்டிக்கவும் முடியாத நிலை நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: