குஜிலியம்பாறை சாலையில் கரும்புகையை கக்கிச் செல்லும் வாகனங்கள்

குஜிலியம்பாறை, பிப். 14: குஜிலியம்பாறையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கரும்புகையை கக்கிக் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் குஜிலியம்பாறை உள்ளது. ஒன்றியத்தின் தலைமையிடமாக குஜிலியம்பாறை உள்ளது. இதனால் இங்கிருந்து திண்டுக்கல், கரூர் நகரங்கள் தவிர திருச்சி, விழுப்புரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது. இதன் காரணமாக இச்சாலையில் தினமும் ஏராளமான வாகன போக்குவரத்து அதிகளவில் சென்று வருகிறது. இது மட்டுமன்றி டூவீலர், கார், லாரி மற்றும் சரக்கு லாரி போக்குவரத்தும் அதிகளவில் உள்ளது.
இவ்வாறு செல்லும் ஏராளமான வாகனங்கள் சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில் கரும்புகையை கக்கிக் கொண்டு செல்கின்றன. இதனால் ஊரின் சுற்றுச்சூழல பாதிப்பது மட்டுமல்லாமல், சில சமயங்களில் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கும் மூச்சு விடுவதற்கு திணறும் நிலை ஏற்படுகின்றது. தினமும் கரும்புகையை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு பின்னால் செல்லும் வாகனங்கள் பாதை தெரியாமல் தடுமாறுகின்றன. தற்போது விற்பனைக்கு வரும் புதிய வாகனங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பரிசோதனை செய்யப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட புகையளவு வெளிவரும் வகையில், வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அதனால் பாதிப்பில்லாமல் உள்ளது.
ஆனால் பழைய வாகனங்களில் சரியாக பராமரிக்கப்படாததால் கரும்புகையை வெளியிட்டபடி சாலையில் செல்கிறது. இவ்வாறு பழைய வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் புகை கக்கும் வாகனங்கள் சாலையில் சென்ற வண்ணம்தான் உள்ளன. ஆகையால் குஜிலியம்பாறை பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில் கரும்புகையை கக்கிக் கொண்டு வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

× RELATED கடையம் அருகே கனரக வாகனங்களால் சேதமடைந்த சாலை