உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிறை சென்ற விவசாயிகளை வைகோ நேரில் சந்திப்பு

சென்னிமலை, பிப். 14:     சென்னிமலை அருகே முதலியாக்கவுண்டன்வலசு கிராமத்தில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில், கலந்து கொண்ட விவசாயிகள் மீது வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ, முதலியாக்கவுண்டன்வலசு கிராமத்துக்கு சென்றார். அங்கு கட்சியின் மாநில பொருளாளர் கணேசமூர்த்தி, தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன், இ.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் பொன்னுசாமி ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த விவசாயிகளுக்கு வைகோ பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
 அப்போது விவசாயிகள் மத்தியில் வைகோ பேசியதாவது: இந்த நிலம் விவசாயிகளின் ஆதாரம். இதன் வழியே மின் கோபுரங்கள் சென்றால் மின் கம்பிகளுக்கு அடியில் இருக்கும் உயிரினங்களுக்கு பிரச்னைஏற்படும் என சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் கூறி வருகிறது. கேரளாவில்  பூமிக்கு அடியில் கொண்டு செல்கிறார்கள். ஆனால் தமிழகம் தான் வஞ்சிக்கப்படுகிறது. கர்நாடகாவில் காவிரியில் அணை கட்ட அனுமதித்து விட்டார்கள். உச்சநீதி மன்ற தீர்ப்பை மீறி முல்லை பெரியார் அணையிலும் தடுப்பணை கட்ட மோடி அரசு அனுமதித்துள்ளது. கொங்கு மண்டலம் பாதுகாப்பாக இருக்கிறது என நினைத்தேன்.   ஆனால் இங்கும் கெயில் வழியாகவும், பாரத் பெட்ரோல் வழியாகவும், உயர் மின் கோபுரங்கள் வழியாகவும் அழிவு வந்து விட்டது. ஏழை, எளிய மக்களுக்கு பாவத்தை செய்யாமல் இந்த திட்டத்தை முதலமைச்சர் கைவிட வேண்டும். விவசாயிகளுக்காக நான் என்றும் துணை நிற்பேன் என வைகோ பேசினார்.

× RELATED திருப்பனந்தாள் வட்டாரத்தில் மானிய...